
‘ பாவியாகிய எனக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்தார்’ என்பதை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளும் எவரும் இரட்சிப்பு என்கிற சுதந்தரமாகிய பலனை அடைகிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கையில் பெற்ற பலன் அத்துடன் நம் வாழ்வில் நின்றுவிடுவதில்லை. அது தொடர்ச்சியாக வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வை வாழ பெலனும் செய்கிறது. “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” என்று கொரிந்தியருக்கு எழுதும் முதலாம் கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் ஒரு முக்கியமான திறவுகோலை விட்டுச் சென்றிருக்கிறார்.
இதை, ‘இரட்சிக்கப்பட்ட நமக்கோ அது தேவபெலனாயிருந்தது’ என்று முடிந்துபோன ஒரு விஷயமாக சொல்லவில்லை. மாறாக, “இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது” என்கிறார். கவனமாக இந்த வார்த்தைகளை அணுகினால்,
இரட்சிக்கப்படுகிற என்பதில் இருந்து நிகழ்காலத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிற ஒன்றாக இரட்சிப்பையும், தேவபெலனாயிருக்கிறது என்பதில் இருந்து இரட்சிப்பு நிறைவேறத் தொடர்ந்து சிலுவையைப் பற்றிய அறிவு நமக்கு தேவனே அளிக்கும் பெலனாகவும் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இதிலிருந்து “இரட்சிப்பு ஒரு வாழ்நாள் காலத்துக்கு உரியது; அந்த இரட்சிப்பு நம்முள் நிறைவேறத் தேவைப்படும் தேவ பெலனும் எல்லாக் காலத்திற்குமானது” என்று விளங்கும். இரட்சிப்புக்குள் நம்மைக் கொண்டுவந்து சேர்த்த தேவ பெலன் அல்லத தேவகிருபை, இரட்சிப்புக்குள் நம் கால் சறுக்கும்போதெல்லாம் தாங்கவும் செய்கிறது.
இரட்சிக்கப்பட்ட உடன் நம்முள் இருந்த அந்தப் பாவநிலை, கிறிஸ்துவால் பரிசுத்த நிலையாக மாற்றப்பட்டு அவரால் அங்கீகரிக்கவும்படுகிறது. அதன்பின் தேவன் ஒரு மனிதனைப் பாவியாகப் பார்ப்பதில்லை. அவன் தேவனுக்குள் பரிசுத்த நிலையில் இருத்தப்படுகிறான். இனி நாம் பழைய பாவ வாழ்க்கையில் இருந்து வாழாமல், புதிய பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த வாழ்க்கையில் நுழைகிறோம். இந்தப் புதிய வாழ்க்கை என்பது நம் உள்ளார்ந்த மாற்றம் சம்பந்தப்பட்டது. ‘நானாவது, பரிசுத்தனாவது!” என்று பல சமயங்களில் இதை நமக்கே சரியாக உணரமுடியாவிட்டாலும், தேவன் நம்மைப் தம்முடைய பரிசுத்தக் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கிறார் என்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பாக்கியம். இதை முதலில் உணர்ந்துகொள்வது பழைய குற்ற உணர்ச்சிகளில் இருந்து வெளியேற நமக்கு மிகவும் அவசியம்.
ஆனால், எப்படி முன்பு பாவநிலையில் இருந்த ஒருவரால் தங்கள் முயற்சியின் விளைவாக சில பரிசுத்த அல்லது நற்செயல்களைச் செய்ய இயலுமோ, அதேபோன்று பரிசுத்த நிலையில் நுழைந்த இரட்சிக்கப்பட்டவராலும் பாவச் செயல்களைச் செய்யமுடியும். காரணம், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கும் பாவம் நிறைந்த உலகில்தான் தொடர்ந்து வாழ்கிறோம். நாமும், பழைய பாவவாழ்க்கை முழுவதையும் முற்றிலும் விட்டுவிட்டு மருரூபம் அடைந்துவிட தேவனோடு உடனடியாக ஒத்துழைத்துவிடுவதில்லை. இந்த மருரூபம் என்பது நாம் இந்த உலகில் உயிரோடு இருக்கும் நாள் வரை நாள்தோறும் நடைபெறும் ஒன்று. சத்தியத்தை அறிய அறிய பல பழைய எண்ணங்களிலும் செயல்களிலும் இருந்து அனுதினமும் விடுதலை பெற்றவர்களாக உருமாறிக்கொண்டே இருக்கிறோம். இது வெளியில் சிலருக்குப் பளிச்சென்று தெரியும். சிலருக்கு நாட்கள், வருடங்கள் ஆகும்.
தேவன் கிருபையாக அருளும் இரட்சிப்பைப் பெற அவரை விசுவாசித்து நாம் ஒருநாளில் எடுக்கும் ஒரு தீர்மானம் மட்டும் போதும். ஆனால், அதன்பின் பரிசுத்தமாகுதலுக்கும் நித்திய வாழ்வுக்கு ஆயத்தமாகுதலுக்கும் ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது. இதற்குக் காரணமாக இருப்பதும் நாம்தான்!. முதலாவது மனிதனை தேவன் உருவாக்கித் தன் சாயலைத் தர அவருக்கு அதிகம் நேரம் பிடித்திருக்காது. ஆனால், இழந்துபோன சாயலை மீண்டும் அவனுள் இருத்த, இப்போது வருடக்கணக்கில் ஆகிறது.
இதற்கு காரணம் என்னவாக இருக்கமுடியும்? எளிதாகக் கிடைத்த அவரது சாயலின் மகத்துவத்தை, அதன் மகிமை புரியாமல் அவன் தன் சுயசித்தத்தத்தால் அளித்துப்போட்டான். மிக எளிதாக மீறுதல், அக்கிரமம், பாவம் அவ்வளவு சுலபமாக அவனுள் புகுந்ததுவிட்டது. பாவம் செய்ய எடுக்காத நேரம் இப்போது மீண்டும் பரிசுத்த நிலைக்கு வரத்தேவைப்படுகிறது. முன்பு எளிதில் சறுக்கிய விஷயத்தில் இன்று ஜாக்கிரதையாய் நடக்கப் பழக அவகாசம் தேவைப்படுகிறது.
முன்பு தேவன் வைத்த பரிசுத்த நிலையை ஆதி பெற்றோர் உணராமல் விட்டனர். ஆனால அதை இம்முறை இரட்சிப்புக்குப் பின் உணர்ந்து மீண்டும் பெறுகிறோம். கிறிஸ்துவின் சிலுவையைப் பற்றிய அறிவு நம்மில் அதைக் கொண்டுவருகிறது. முன்பு இறைவன் மனிதனைப் படைத்த நோக்கத்தை உணராமல் சென்றுவிட்டதுபோல, மீட்கப்பட்டவர்கள் இருப்பதில்லை. அவர்கள் இனி கிறிஸ்துவுக்குள் தேவ நோக்கம் அறிந்தவர்களாக, அவருடைய பெலத்தைப் பெற்று ஜெயம் பெற்ற கிறிஸ்தவர்களாக நித்திய வாழ்வை வாழத் துவங்குகின்றனர்.
இப்படி தேவ உறவை மீண்டும் உள்நிறுத்த, அந்த உறவின் மகத்துவத்தையும் மகிமையையும் இரட்சிக்கப்பட்டவர்கள் அறியச் செய்யத்தான் வேண்டும். அதற்காக, இயேசு சிலுவையில் செய்த உன்னதமான மீட்பைப் புரிந்துகொண்டு இனி அவரது சாயலைப் பெற்றுக்கொள்ள நமக்கு ஆகும் காலம், ‘நம்முடைய ஒரு வாழ்நாள்’ என்று இருந்தால்தான் அதன் முக்கியத்துவமும், கிருபையாக தேவன் அதற்குத் தந்த விலையும், அதற்குள் இருக்கும் அன்பின் தியாகத்திட்டமும் புரியும். இந்தக் காலத்தில்தான் நாம் தேவ பெலனையும் பெற்றவர்களாக அவரை அறிந்து கொண்டே இருக்கிறோம். விடுதலையின் ஆசிர்வாதத்தை கண்காணாத பரலோகத்தில்தான் என்றில்லாமல், இங்கேயே ருசிக்கத்துவங்குகிறோம். பாவத்தின்மேல் பெறும் வெற்றியை இங்கேயே அனுபவிக்கவும் செய்கிறோம். பெற்ற இரட்சிப்புக்கு நாம் விலை செலுத்த வாய்ப்பே இல்லை என்றும் இது அவருடைய ஈவு மட்டுமே என்பதையும் இங்குதான் நாம் புரிந்துகொள்கிறோம்.
இப்படிப் பாவத்தின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட நாம் மீண்டும் இந்த வாழ்நாள் காலம் முழுவதும் அந்தப் பாவத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், அப்படியே ஒருவேளை இடறல் அடைந்து பாவம் செய்தாலும் மீண்டும் மன்னிப்பைக் கேட்டுப் பெற்று இறை உறவுக்குள் நிலைக்கவும், நாம் பெற்ற இந்த இறை அன்பின் புரிதலை மற்றவருக்கும் அன்பாகக் கடத்தவும் அன்று சிலுவையில் இயேசுக்கிறிஸ்து வெளிப்படுத்திய அன்புதான் நமக்குள் தொடர்ந்து தேவ பெலனாக இருக்கிறது. ‘அவர் எனக்காக ஏன் மரிக்கவேண்டும்?’ என்பதை நாம் வாழ்நாளெல்லாம் தியானிக்கும்போது, அவரது திட்டம் தினமும் நம்மில் நிறைவேறுவதையும் நாம் புரிந்துகொள்வோம். இப்படியாக, அவர் சுமந்த சிலுவை நமக்கு முன் ஒரு உதாரணமாக இருந்து எந்த பாரங்களையும் சகிக்கவும், தெய்வீகமான ஆசிர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்ளவும், அவரது நாள் வரை நிலைத்து நிற்கவும் உதவி செய்யும். தேவனே இதை வாசித்த உங்கள் வாழ்விலும் தம் சிலுவையின் முழுபலன்களும் நிறைவேற தொடர்ந்து உதவிசெய்வாராக. ஆமென்.