டோபமைன்: வீணாக்கப்படும் இறைப்படைப்பு

dopamine in tamil

எக்கச்சக்கமாக மொபைலில் நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருப்பீர்களானால், டோபமைன் என்கிற வார்த்தை ஒருமுறையாவது உங்களைக் கடந்து சென்றிருக்கும். இது நம் உடலில் ஏற்படும் ஒரு அவசியமான சுரப்பு. நம் சரீரம் தேவன் வடிவமைத்த ஒரு அதிசயமான கருவி. அதில் ஹார்மோன்களின் பங்கு மிகவும் அதிகம். பிரச்சனைகள் வராதவரை இந்த ஹார்மோன்களைப் பற்றியும் நாம் அதிகம் யோசிப்பதில்லை. ஹார்மோன்கள் ஒருவகை வேதிப்பொருட்கள் – பழைய தமிழில் இரசாயனம். நம் உடலில் ஒவ்வொரு இரசாயனமும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒரு அற்புதமான இரசாயனம்தான் “டோபமைன்” (Dopamine). சமீபகாலமாக அதிகம் பேசப்படும் ஒரு ஹார்மோன் இந்த டோபமைன். 

நம்முடைய உடல் எவ்வளவு அற்புதமான இறைப்படைப்பு என்பதை வேதத்தில் பல இடங்களில் வாசிக்கலாம். சங்கீதம் 139:14-ல், “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால் உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் ஆச்சரியமானவைகள், என் ஆத்துமா அதை நன்றாய் அறியும்” என்று தாவீது ராஜா கூறுகிறார். 

டோபமைன் அந்த ஆச்சரியங்களில் ஒன்று.  நமக்குள் அப்படி ஒரு ஆச்சரியமான ஒரு கிரியை செய்யக்கூடிய சுரப்பு!

டோபமைன் என்பது நம்முடைய மூளையில் உருவாகும் ஒரு நரம்புக் கடத்தி (neurotransmitter). எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், இது நம்முடைய மூளைக்குள்ளே தகவல்களை அனுப்பும் ஒரு கெமிக்கல் தூதுவன். இது நம்முடைய மனநிலையில் ஊக்கம், கவனம், மகிழ்வான உணர்வு மற்றும் அறிதல் போன்ற பல செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

டோபமைனும் இன்பமும்:

நாம் ஒரு செயலைச் செய்யும்போது, அது நமக்கு மகிழ்ச்சியையோ, திருப்தியையோ, வெற்றியையோ தரும்போது, அந்த உணர்வின் பின்னால் நம்முடைய மூளை வெளியிடும் டோபமைன் இருக்கிறது. உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த புரோட்டா மட்டன் வறுவல் சாப்பிடும்போது,  அல்லது ஒரு புதிய சுவாரசியமான விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது, அல்லது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடையும்போது இந்த டோபமைன் சுரக்கும். இது ஒருவிதமான ‘சன்மான உணர்வு’ (reward sensation) எனலாம். அல்லது ‘ஆனந்த ஊக்கி’ (happiness booster) என்றும் சொல்லலாம். இது நாம் நல்ல விஷயங்களைச் செய்யும்போது நம்மை ஊக்குவிக்கும் விதமாக தேவன் வைத்திருக்கும் ஒரு அருமையான படைப்பு.

ஆனால், விழுந்துபோன உலகில் எல்லா நன்மைகளும் அப்படியே தேவனுடைய விருப்பதின்படி இல்லை. டோபமைனில் பிரச்சனையும் உண்டு. பாவமானது நம்முடைய சரீரத்தையும், ஆத்துமாவையும் கெடுப்பதைப் போலவே, டோபமைன் சுரப்பதிலும் அது சீர்கேட்டை உண்டாக்கிவிடுகிறது. பாவச்செயல்கள், நம்மை அடிமைப்படுத்தும் பழக்கங்கள் (போதைப் பொருட்கள், மது, சூதாட்டம், சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாதல் போன்றவை) டோபமைனை செயற்கையாகவும், அதிக அளவிலும் சுரக்கச் செய்து, நம்முடைய மூளையின் இயற்கையான சமநிலையைக் கெடுத்துவிடும். இதன் விளைவாக, நாம் அந்தச் செயல்களுக்கு மேலும் மேலும் அடிமையாகி, இயற்கையான சந்தோஷங்களை அனுபவிக்கும் திறனை இழந்துவிடுவோம். “பாவமானது நம்மை வஞ்சிக்கும்” என்று வேதம் கூறுவது இதனால்தான். 

இது இன்று நம்மிடம் கவனம் பெறக்காரணம் சோஷியல் மீடியா அடிமைத்தனம். மணிக்கணக்கில் இன்ஸ்டாகிராமில் விரல்களை உருட்டிக்கொண்டே இருப்பது. ஷார்ட்ஸை தள்ளிக்கொண்டு முன்னால் இருக்கும் சோற்றை மறந்துவிடுவது. மனைவி பிள்ளைகளை மறந்துவிட்டு வாட்ஸப்பில் சண்டையிட்டுக்கொண்டிருப்பது. இதெல்லாம் டோபமைன் பிரச்சனைகளே.

நாம் குடி, ஆபாச, சூதுப் பழக்கங்கள் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், இந்த வரிசையில் இன்று இணைந்திருக்கும் சோஷியல்மீடியா அடிமைத்தனத்தில் இணையாதவர்கள் வெகு சிலரே. வயது வித்தியாசமின்றி நேரம்காலம் தெரியாமல் மூழ்கிக்கிடக்காரணம் அதீதமாக மூழ்கிக்கிடப்பதற்கு இந்த டோபமனைத்தான் இன்று காரணம் காட்டுகிறார்கள்.  இந்த டோபமைனுக்கு நாம்தான் காரணம் ஆதலால், சுரப்பிமேல் பழிபோட்டுவிட்டு விரலைத் தேய்த்துகொண்டிருக்க முடியாது.

பாவத்தின் பிரச்சனை என்னவென்றால், அது பாவமல்ல என்கிற அளவுக்கு நம்மைத் தேற்றிவைத்திருப்பது. அதுவும் குறிப்பாக மொபைல்-சோஷியல் மீடியாவில் பொழுதைப்போக்குவது பாவம் என்பதை பலர் ஒத்துக்கொள்ளாததற்குக் காரணம், அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் முதலில் ஒத்துக்கொள்ள விரும்பாத அளவுக்கு வஞ்சனையில் கிடப்பதுதான். “நா அப்படியெல்லாம் இல்ல” என்று குற்றச்சாட்டைப் புறக்கணிக்கக் காரணம் எவ்வளவு பயன்படுத்தலாம், எங்கே நிறுத்தவேண்டும் என்பதற்குத் தெளிவான அளவுகோல் இல்லாததே. அதிக நேரம் என்றால் எவ்வளவு? பயன்படுத்தவே கூடாது என்றால் எப்படி? ஒரேயடியாக முனிவராக வேண்டுமா, இதில் என்ன இருக்கு? மற்றவருக்கு என்ன பிரச்சனை?- என்றெல்லாம் மனதின் எண்ண ஓட்டம் செல்வதால், டோபோமைனின் தாறுமாறான சுரப்பில் இருந்து விடுதலை என்பதெல்லாம் எண்ணமற்றுப்போகிறது.

தேவனின் கிருபையும் டோபமைனும்:

தேவன் நம்மைப் படைத்தவர் என்பதால், நம்முடைய ஆத்துமா மற்றும் சரீரத்தின் ஒவ்வொரு இரகசியத்தையும் அவர் அறிந்திருக்கிறார். பாவத்தின் பிடியில் சிக்கிய நம்மை மீட்கவே இயேசுக்கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார். எனவே அவர் பாவம் என்று எதைச் சொல்கிறார் என்று அறிய அவரிடமே சென்று நின்றாகவேண்டும். நம்முடைய இயலாமையை அறிந்து, அவரே நம்மை நீதிமான்களாக்குகிறார் என்பதால் இதில் தயக்கம் அவசியமில்லை.

தேவனுடைய பிள்ளைகளாக்கப்பட்ட நாம், தேவனை மகிமைப்படுத்தும் விதத்தில்தான் நம்முடைய சரீரத்தைப் பயன்படுத்தியாக வேண்டும். சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை தேவனின் இராஜ்ஜியத்தின் நோக்கத்திற்காகப் பயன்படுத்த முடியும் – ஆனால் அதைச் சாக்காக வைத்துக்கொண்டு இடறிக்கிடக்க அங்கேயும் தேவன்மட்டுமே உதவி செய்யமுடியும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே இருப்பதால், நாம் பாவத்தின் பிடியில் சிக்காமல் இருக்க அங்கும் அவர் நமக்கு உதவி செய்கிறார்.

டோபமைன் போன்ற நம் சரீரத்தின் அற்புதங்கள், தேவனுடைய ஞானத்தையும், படைப்பின் மகத்துவத்தையும் காட்டும் நுட்பமான விஷயங்கள். அடுத்தமுறை மணிக்கணக்கில் நேரத்தை வீணடித்தபின் அதை எப்படி மேற்கொள்ளப்போகிறோம், அதன் சுரப்பை எப்படி சீர்படுத்தப்போகிறோம் என்பதைக் கற்றுக்கொள்வது ஜெயம் பெற்ற கிறிஸ்தவ வாழ்வுக்கு அவசியம். அதற்கு இறைக் கிருபை எப்போதும் உண்டு என்பதுதான் நமக்கு இருக்கும் ஆசுவாசம்.

தேவனுடைய ‘அந்தக்’ கிருபை உங்களனைவரோடும் இருப்பதாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *