
சென்ற நூற்றாண்டின் முதல் 50 வருடங்கள் பல நாடுகளில் மரணக்களங்களாகத்தான் இருந்தன. குறிப்பாக உலகப் போர்களின் விளைவாக ஐரோப்பா சந்தித்த இழப்புகள் பல இலட்சம். ஆனாலும், அக்காலங்களில் கோழைத்தனமான கொடூரங்களை அரங்கேற்றிய பலர் நடுவில் அவர்களை மிகத்தைரியமாக எதிர்கொண்ட வீரர்களும் தோன்றினர். அவர்களில் ஒருவர் டீட்ரிச் போன்ஹோஃபர் (Dietrich Bonhoeffer) . இவர் ஒரு ஜெர்மானியர், கிறிஸ்தவர்.
தமிழ்க் கிறிஸ்தவர்கள் அதிகம் அறிந்திராதவர் போன்ஹோஃபர். வரலாற்றின் கருமையான பக்கங்களில் கிறிஸ்துவுக்காக வைராக்கியமாக ஒளிவீசும் நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் இவர் என்பதால் அவரைப் பற்றி நாம் கொஞ்சம் அறிந்துகொள்வது நல்லது.
1945-ல், தனது 39-வது வயதில், நாசிகளால் தூக்கிலிடப்படுவதற்கு சற்று முன்பு, டீட்ரிச் போன்ஹோஃபர் தன்னுடன் சிறையிலிருந்த ஒருவரிடம் சொன்னது அவரை பற்றி எளிதாகப் புரியவைத்துவிடும். “மரணம் – என்னைப் பொறுத்தவரை, இதுவே வாழ்வின் ஆரம்பம்”! மரணம் எல்லாக் கிறிஸ்தவருக்கும் உண்டு. ஆனால், அதுவே புதிய துவக்கமாகவும் அமையப்போகிறது என்பதால் கிறிஸ்தவர்கள் அனைவருமே ஆழமாக மனதில் பதித்து வைக்க வேண்டிய வரிகள் இவை.
போன்ஹோஃபர் ஒரு ஜெர்மானியர் என்றாலும், ஹிட்லர் நடத்திய யூத இனப்படுகொலைகளுக்கு நடுவே சாட்சியாய் வாழ்ந்து மரித்தவர். நன்கு கற்றவர்; ஆழமான இறையியலாளர் (Theologian); தைரியமிக்க போதகர்; அசைக்க முடியாத விசுவாசம் கொண்ட கிறிஸ்துவின் சீஷர். மேலும் தன்னைக் கர்த்தருக்கென்று அர்ப்பணித்த ஓர் இரத்தசாட்சி. அவரது வாழ்வும், அவர் சந்தித்த பாடுகளும், இன்றும் அநேக விசுவாசிகளுக்கு நிச்சயம் உத்வேகம் அளிப்பவை.
ஆரம்ப கால வாழ்வும் தேவ அழைப்பும்:
ஜெர்மனியில் 1906 ஆம் ஆண்டு, ஒரு படித்த, வசதியான குடும்பத்தில் போன்ஹோஃபர் பிறந்தார். சிறு வயதிலேயே இறையியலில் ஆர்வம் கொண்டு, வேதத்தைப் படிக்கவும், கர்த்தரை அறியவும் தொடங்கினார். அவரது குடும்பம் முழுவதுமே நல்ல கல்விமான்களால் நிறைந்தது. செல்வாக்கு மிகுந்தவர்கள்கூட. போன்ஹோஃபரும் தனது இறையியல் கல்வியை மிகச் சிறப்பாக முடித்து, இளம் வயதிலேயே போதகராகவும், பேராசிரியராகவும் பணியாற்றத் தொடங்கினார். அவரது கூர்மையான அறிவும், தேவனைப் பற்றிய ஆழமான புரிதலும் பலரையும் வியக்க வைத்தன. உலகப்போர் சூழ்ந்த அந்த காலகட்டத்திலும் தேவனுடைய கிருபையினால், திருச்சபை ஊழியத்திற்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.
ஹிட்லரின் எழுச்சியும் திருச்சபையின் போராட்டமும்:
1930களில் ஜெர்மனியில் அடால்ஃப் ஹிட்லரின் நாசிசக் கட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஹிட்லரின் கொடுங்கோன்மை ஆட்சியானது, கிறிஸ்தவ விசுவாசத்திற்கும், திருச்சபைக்கும் பெரும் சவாலாக அமைந்தது. சபைக்கு வெளியே எதிரியாக நின்றதுமல்லாமல் ஹிட்லர், தனது ஆரிய இனவெறிக் கொள்கைகளைத் திருச்சபைக்குள்ளும் புகுத்த முயன்றார். யூதர்களை வெறுத்து ஒதுக்கும்படியும், அரசாங்கத்தின் கொள்கைகளுக்குக் கண்மூடித்தனமாகக் கீழ்ப்படியும்படியும் சபைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், அநேக ஜெர்மானிய கிறிஸ்தவர்களும், சபைத்தலைவர்களும் ஹிட்லரின் கொள்கைகளுக்குப் பணிந்துபோகவும் செய்தார்கள். ஆனால், போன்ஹோஃபர் போன்ற சிலர், இது வேதத்திற்கு முற்றிலும் எதிரானது என்பதை உணர்ந்தனர். இதை எதிர்த்து போன்ஹோஃபரும் அவரது நண்பர்கள் சிலரும், “ஒப்புரவாகும் திருச்சபை” (Confessing Church) என்ற இயக்கத்தைத் தொடங்கினார்கள். இந்த இயக்கம், சபைக்குள் அரசாங்கத்தின் தலையீட்டை எதிர்த்தும், கிறிஸ்துவின் மெய்யான சுவிசேஷத்தை அறிவிக்கவும் தைரியமாக முன்வந்தது. போன்ஹோஃபர் இந்த இயக்கத்தின் முக்கிய குரல்களில் ஒருவராக ஒலித்தார். அவர், கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையானது, எந்தவொரு பூலோக அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டதல்ல, அது கிறிஸ்துவுக்கு மாத்திரமே கீழ்ப்படிய வேண்டும் என்று வேதாகமத்தின் அடிப்படையில், பல இடங்களுக்கும் பயணித்து தைரியமாகப் பிரசங்கிக்கத்துவங்கினார். எதிர்பார்த்ததுபோலவே அவர் எதிர்கொண்ட சூழல் அவ்வளவு எளிதாக இல்லை.
விலையேறப்பெற்ற கிருபை மற்றும் சீஷத்துவம்:
போன்ஹோஃபரின் இறையியல் சிந்தனைகளில் மிகவும் முக்கியமானது “மலிவான கிருபை” (Cheap Grace) மற்றும் “விலையேறப்பெற்ற கிருபை” (Costly Grace) என்று கிருபை குறித்த அவரது போதனை ஆகும். பாவமன்னிப்பு உண்டு, இரட்சிப்பு இலவசம் என்று கூறிக்கொண்டு, மனந்திரும்புதல் இல்லாமலும், கீழ்ப்படிதல் இல்லாமலும், தியாகம் இல்லாமலும் வாழும் கிறிஸ்தவத்தை அவர் “மலிவான கிருபை” என்று கண்டித்தார். அவ்வளவு இக்கட்டான நிலையிலும் சபைகள் செயல்பட்ட விதங்கள் உண்மையிலேயே அவரை மிகவும் வருத்தமடையச் செய்தன.
மாறாக, “விலையேறப்பெற்ற கிருபை” என்பது, கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் நமக்குக் கிடைத்த மாபெரும் ஈவு என்றும், அந்த கிருபையைப் பெற்ற நாம், நம்முடைய ஜீவனைக் கிறிஸ்துவுக்காக அர்ப்பணித்து, அவரது சித்தத்தின்படி நடக்க வேண்டும் என்றும் போதித்தார். எழுதினார். உண்மையான விசுவாசம் என்பது, வெறும் வார்த்தைகளில் அல்ல, செயல்களில் வெளிப்பட வேண்டும். அது பாடுகளையும், உபத்திரவங்களையும் சந்திக்கத் துணியும் சீஷத்துவ வாழ்வைத்தான் முன்னிலைப்படுத்துகிறது என்பதே அவரது செய்திகளின் சாராம்சம். விலையேறப் பெற்ற கிருபைதான் சீஷத்துவத்தையும் விலையேறப்பெற்ற ஒன்றாக மாற்றுகிறது என்பதால், இந்த விலையேறப்பெற்ற சீஷத்துவத்தை வாழ்ந்து காட்ட, அவர் ஒரு இரகசிய வேதபாடசாலையையும் நடத்தி, இளம் போதகர்களுக்குப் பயிற்சி அளித்தார். போன்ஹோஃபரின் The Cost of Discipleship (சீஷத்துவத்தின் விலை) என்கிற புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. (தமிழில் இல்லை.)
ஹிட்லருக்கு எதிரான எதிர்ப்பும் சிறைவாசமும்:
நாசிச ஆட்சியின் கொடுமைகள் அதிகரிக்க அதிகரிக்க, வெறும் வார்த்தைகளால் மட்டும் ஹிட்லரை எதிர்ப்பது போதாது என்பதாக போன்ஹோஃபர் உணர்ந்தார். யூதர்கள் கொடூரமாக நடத்தப்படுவதையும், ஹிட்லரின் போர் வெறியையும் கண்டு, அவர் மிகுந்த வேதனை அடைந்தார். கிறிஸ்தவ மனசாட்சியின் அடிப்படையில், ஹிட்லரின் கொடுங்கோன்மையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கடினமான முடிவுக்கு வந்தார். அவர், ஹிட்லரைக் கொல்ல முயன்ற ஒரு இரகசிய எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். (அப்படி அவர் செய்யவில்லை என்று சொல்பவர்களும் உண்டு). இது ஒரு போதகருக்கு மிகவும் சவாலான, தார்மீக ரீதியாகச் சிக்கலான முடிவு. ஆனாலும், லட்சக்கணக்கான உயிர்களைக் காக்கவும், அநீதியைத் தடுக்கவும் இது அவசியம் என்று அவர் நம்பினார்.
இப்படி ஒரு சதித்திட்டம் நடந்ததாகவும் அதில் போன்ஹோஃபரும் ஒருவர் என்று 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், போன்ஹோஃபர் கெஸ்டபோ (நாசி இரகசிய போலீஸ்) படையினரால் கைது செய்யப்பட்டார். இருந்தபோதும், ஹிட்லருக்கு எதிரான சதித்திட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை. ஆனாலும், அவரோடு இருந்த பலரும் அப்படிக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அதில் அவரது சகோதரரும் இரத்த உறவுகளுகூட இருந்தனர். கைதானவர் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைச்சாலையின் கொடிய சூழ்நிலையிலும், அவரது விசுவாசம் அசைக்கப்படவில்லை. அவர் சக கைதிகளுக்கு ஆறுதல் கூறினார், ஜெபித்தார், மேலும் தனது புகழ்பெற்ற “சிறையிலிருந்து கடிதங்களும் குறிப்புகளும்” (Letters and Papers from Prison) என்ற நூலையும் எழுதினார். இந்த எழுத்துக்கள், ‘பாடுகளின் மத்தியிலும் தேவனோடு நெருங்கி வாழ்வது எப்படி?’ என்பதையும், இந்த உலகத்தில் கிறிஸ்தவனின் பொறுப்பு என்ன என்பதையும் குறித்த ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றன. அவர் சந்தித்த உபத்திரவங்கள், அவரது விசுவாசத்தை மேலும் புடமிட்டன.
இரத்தசாட்சியாய் மரணம்:
போர் முடிவுக்கு வரும் தறுவாயில், ஹிட்லரின் ஆட்சி அனேகமாகக் கவிழ்ந்துகொண்டிருந்தது. ஆனால் அந்தச் சூழலிலும் , ஹிட்லர் தனது எதிரிகளைப் பழிவாங்கத் தவறவில்லை. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, போரின் முடிவு நெருங்கிவிட்ட சமயத்தில், ஹிட்லரின் நேரடிக் கட்டளையின் பேரில், டீட்ரிச் போன்ஹோஃபர், ஃப்ளோசன்பர்க் வதை முகாமில் தனது 39வது வயதில் தூக்கிலிடப்பட்டார். அவரது மரணத்திற்கு முன், அவர் மிகுந்த அமைதியுடனும், தைரியத்துடனும் காணப்பட்டதாக உடனிருந்த சிலர் சாட்சியாகச் சொன்னார்கள். “இது முடிவு அல்ல, இது வாழ்வின் ஆரம்பம்” என்று அவர் கூறியதாகப் பதிவுகள் உள்ளன. அவர் தனது மரணத்தின் மூலம், தனது விசுவாசத்திற்கு ஒரு அழியாத சாட்சியாக மாறினார்.
டீட்ரிச் போன்ஹோஃபரின் வாழ்வு, சவால்கள் நிறைந்த காலங்களில் ஒரு கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு அருமையான எடுத்துக்காட்டு. அவரது வாழ்க்கை, விலையேறப்பெற்ற கிருபையையும், உண்மையான சீஷத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. வெறும் சடங்காச்சாரமான கிறிஸ்தவத்தை விட்டுவிட்டு, நமது விசுவாசத்தை செயல்களில் காட்டவும், அநீதிக்கு எதிராக நிற்கவும், பாடுகளையும் உபத்திரவங்களையும் கிறிஸ்துவுக்காகச் சந்திக்கத் தயாராகவும் இருக்க வேண்டும் என்று அவர் நமக்குக் கற்பிக்கிறார். போன்ஹோஃபரின் தைரியமும், அர்ப்பணிப்பும், கிறிஸ்துவின்பால் அவர் வைத்திருந்த அசைக்க முடியாத விசுவாசமும், இன்றும் உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது. நாமும் நமது வாழ்வில் கர்த்தருக்குச் சாட்சிகளாய் வாழ, அவரது கிருபை நம்மை வழிநடத்துவதாக. ஆமென்.
உங்களால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியுமானால் Bonhoeffer: Pastor, Martyr, Prophet, Spy என்கிற புத்தகத்தை வாசிக்கப் பரிந்துரைக்கிறேன். Eric Metaxas எழுதியது).
Benny Alexander