சி. எஸ். லூயிஸ் 

சி எஸ் லூயிஸ்

சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த கிறிஸ்தவ எழுத்தாளர்  CS Lewis என்று சொன்னால் பலர் மறுக்கப்போவதில்லை. அவரை வாசிப்பது கடினம் என்பது முதல் புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றியது. அதற்குக் காரணம் அவர் அல்ல. அவரது சில முக்கியமான புத்தகங்கள் அவரது உரைகளில் இருந்து எழுத்துக்களாகத் தொகுக்கப்பட்டவை. அக்கால பிரிட்டிஷ் அறிஞர்களின் ஆங்கிலம் என்பதால் அதை அப்படியே எழுதிவிட்டார்கள். அவரது கருத்துக்களில் கைவைத்துவிடக்கூடாது என்பதற்காகவே புத்தகங்களை எளிமைப்படுத்தும் முயற்சியை எவரும் செய்யவில்லை. 

நாத்திகத்தில் இருந்து ஆத்திகனாக மாறிய கிளைவ் ஸ்டேப்பிள்ஸ் லூயிஸ், சி. எஸ். லூயிஸ் என்று தன் வாசகர் வட்டத்தால் அறியப்படும் கதாசிரியர், பேச்சாளர் மற்றும் இறையியலாளர். இன்றைய மேற்கத்தியக் கிறிஸ்தவப் போதகர்களில் இவரைக் குறிப்பிடாமல், வாசிக்காமல் இறையியலைப் போதிப்பவர் குறைவு. இவரை அறியாத சினிமா விரும்பிகளும் இருப்பது அறிது. குரோனிக்கில்ஸ் ஆஃப் நார்னியா (Chronicles of Narnia) தொடர்படங்களின் கதை இவருடையதே. பெரும் வெற்றிபெற்ற படங்களாக எடுக்கப்பட்டவை அவை.

லூயிஸ் 1898ல் இங்கிலாந்தில் பெல்ஃபாஸ்டில் பிறந்தார். தான் எவ்வளவோ ஜெபித்தும் தன் தாயாரைப் புற்றுநோக்கு பலிகொடுத்துவிட்டோமே என்ற ஆதங்கம் அவரை வாட்டி, தன் கிறிஸ்தவ நம்பிக்கையை விட்டு வெளியேறி நாத்திகரானார். அதுவும் சிறு வயதிலேயே!

ஒருமுறை இவ்வாறு தன் நிலைப்பாட்டை விளக்கினார். “ ஷேக்ஸ்பியர் எழுதி நாடகமான ஹேம்லட்டின் (Hamlet) கதாநாயகனான ஹேம்லட்டால் எப்படித் தன்னை எழுதிய ஷேக்ஸ்பியரை அறிய இயலாதோ அதைப்போல என்னைப் படைத்த கடவுளை நான் எப்படி அறிய இயலும்? அது என் குற்றமில்லை” என்றார்.

இப்படிக் ‘கடவுள் இல்லை’ என்பதை நிலைப்பாடாகக் கொண்டிருந்தவருக்கு ஜே ஆர் ஆர் டோல்கீனின் (JRR Tolkien) நட்பு ஆக்ஸ்போர்டு பல்கலையில் கிடைத்தது. டோல்கீன் கிறிஸ்தவர். ஹோபிட் மற்றும் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் (Lord of the Rings) தொடர் கதைகளை எழுதியவர். அவைகளும் சினிமாக்களாக வந்து உலகமெங்கும் இரசிக்கப்பட்டவை. டோல்கினுடன் நடந்த பல தொடர் விவாதங்களுக்குப் பின் சிஎஸ் மீண்டும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். (ஜார்ஜ் மெக்டோனால்ட் மற்றும் ஜி.கே. செஸ்டர்டன் எழுதிய பல புத்தகங்களும் லூயிஸின் திருப்பத்தின் பின்னால் இருந்தன.) அதன்பின் கிறிஸ்துவுக்குள் ஆழ்ந்த உறவைப் புதுப்பித்தபின்பு அவர் எழுதிய நூல்கள் சிறந்த இறையியல் நூல்களாக இன்றும் விரும்பி வாசிக்கப்படும் Mere Christianity, Problem of Pain, Screwtape letters, Great Divorce மற்றும் பல. இவை பெரும்பாலும் அவரது ரேடியோ சொற்பொழிவுகள். முதலாம், இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின் வெளிவந்தவை.

கிறிஸ்தவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வது கண் மூடித்தனமாகச் செய்யவேண்டிய பக்திச் செயல் அல்ல. மாறாக ஆராய்ந்து உய்த்துத் தெளிந்தபின் ஏற்றுக் கொள்ளவேண்டிய பகுத்தறிவுக்கு உட்பட்டதே என்பதை அவரை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். அதைத்தான் அவரும் வலியுறுத்தினார். வாசிக்க சற்றுக் கடினமான பழைய ஆங்கில நடையுடன் லூயிஸின் புத்தகங்கள் இருந்தாலும் ஆங்கிலத்தில் வாசிக்க இயலும் எவரும் வாசித்தே தீர வேண்டிய அருமையான தத்துவார்த்தமான கிறிஸ்தவ நூல்கள் அவை.  இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பின் நான் எழுதியவை வாசிக்கப்படுமா என்று சந்தேகிக்கிறேன் என்று சொன்னவரது புத்தகமான “Mere Christianty” இன்றும் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் ஆங்கிலப் புத்தகம். 

சக் கோல்ஸன் என்படும் சார்ல்ஸ் கோல்ஸன், முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்ஸனுடன் இருந்தவர்; நாத்திகர்; நிக்ஸனுடன் வாட்டர் கேட் ஊழலில் சிக்கி சிறைத் தண்டனையும் அனுபவித்தார். ஒரு நாள் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும்போது வாயிலில் யாரோ ஒருவர் அவரிடம் Mere Christianity புத்தகத்தைத் தந்தார். அதை வாசித்த கோல்ஸன், மனமாற்றம் கண்டு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். பிற்காலங்களில் உலகளாவிய சிறை ஊழியங்களை ஏற்படுத்தினார். (தமிழ்நாட்டுச் சிறைகளுக்குக்கூட வந்திருக்கிறார்). 

நாத்திகர்களுக்கான பதில்கள் அனேகமாக முழுமையாக Mere Christinity புத்தகத்தில் இருப்பதாகக் கருதுகிறேன். முடிந்தால் வாசியுங்கள். Chronicles சீரியஸ் படங்களும் குழந்தைகளுடன் காண வேண்டியவை. 

சுமார் 30 புத்தகங்களை எழுதினார் சி.எஸ்.லூயிஸ். பல இலட்சம் பிரதிகள் தாண்டி இன்று அவை விற்பனையாகின்றன. பல புத்தகங்கள் அமேஸான் கிண்டலிலும் உண்டு. தனது 65வது வயதில் நாம்பர் 23ம் தேதி மறைந்தார் அவர். (அதே நாளில் அதிபர் ஜான் கென்னடி கொல்லப்பட்டதால், லூயிஸின் மரணம் பெரிதாகப் பேசப்படவில்லை.)

பின்னொரு காலத்தில் ஹேம்லட்-ஷேக்ஸ்பியர் உதாரணத்தைச் சுட்டிக் காட்டிக் கேட்டபோது லூயிஸ் சொன்னார். “என் எண்ணம் சரியானது என்றுதான் நான் இப்போதும் நினைக்கிறேன். ஹேம்லெட்டால் ஷேக்ஸ்பியரை அறியமுடியாவிட்டாலும், ஷேக்ஸ்பியர் தன்னை ஒரு கதாபாத்திரமாக எழுதி நாடகத்தில் உலவவிட்டு அந்தப் பாத்திரம் ஹேம்லட்டிடம் தன்னை வெளிப்படுத்துவதாகச் செய்வது ஒன்றும் பெரிய காரியமில்லையே; அதைத்தான் இறைவன் மனிதனாக வந்து செய்துகாட்டினார்“, என்று.

இனி சி எஸ் லூயிஸின் சில கூற்றுக்கள்:

தாழ்மை உங்களைக் குறைவாக நினைப்பதல்ல; உங்களைக் குறித்துக் குறைவாக நினைப்பது.

நான் காணும் சூரியனை நம்புவதைப் போலக் கிறிஸ்தவதையும் நம்புகிறேன். நான் பார்க்க முடிவதால் அல்ல. எல்லவற்றையும் நான் அதன் வழியாகப் பார்க்கமுடிவதால்.

நாம் நல்லவர்கள் என்பதால் நம்மை நேசிப்பதில்லை, நாம் நல்லவர்களாக மாறவே அவர் நேசிக்கிறார்.

நான் விட்டுச் செல்லும் பல விஷயங்களை விட, மேலான, மிகவும் மேலான பல நமக்காக் காத்துக்கொண்டிருக்கின்றன.

தேவன் தன்னைத் தவிரத் தனியாகத் தர சமாதானம் என்றும் மகிழ்ச்சி என்று எதையும் தர இயலாது. ஏனென்றால் அப்படி எதுவும் இல்லை. 

இந்த அண்டசராசரமும் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றால், எந்த அர்த்தமும் இல்லை என்பதைக் கண்டறியவேண்டிய அவசியமும் இல்லை!

நான் சுதந்திரமாக இருக்கப் பிறக்கவில்லை. தொழுதுகொள்ளவும் கீழ்படியவும்தான் பிறந்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *