சிலுவைப் போர் சரியா?

சிலுவைப்போர்கள் சரியா?

கேள்வி: கிறிஸ்தவத்தின் பேரால் உலகில் நடைபெற்ற படுகொலைகளைப் (உம்: சிலுவைப் போர்) பற்றி என்ன சொல்கிறீர்கள்?

பதில்: கிறிஸ்தவத்தின் பெயரால் யார்வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். “கிறிஸ்து”வின் பெயரிலும்கூட தாங்கள் விரும்பியதையெல்லாம் வருந்திச் செய்யலாம். அது போராக இருந்தாலும் சரி. ஊழியம் என்று நாம் நினைத்துக் கொண்டு செய்வதாயினும் சரி!.

ஆனால், எதைச் செய்தாலும் கிறிஸ்துவுக்கு மகிமையைச் (அதாவது அவருக்குப் புகழை) சேர்ப்பதுவும், அதுவும் அவர் காட்டிய வழியில் அவர் விரும்பும் வண்ணமாகச் செய்வதுமே கிறிஸ்தவனின் செயல்பாடாக இருக்கமுடியும். மற்றதெல்லாம், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாயாக, அல்லது அப்படி ஒரு ஓநாய்க்குச் சேவகமாக செய்யும் வேலைதான் சிலுவைப் போர்கள்போன்றவை.! இப்படிப்பட்டவை எதுவும் கிறிஸ்துவுக்கு இகழ்ச்சியையே கொண்டுவரும். கிறிஸ்துவைக் கொலை செய்தவர்கள் என்ற அவப்பெயர் தாங்கி நின்ற யூதர்களை கிறிஸ்துவுக்குப் புகழைச் சேர்ப்பதாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புவதாகவும், கிறிஸ்துவுக்க்காகப் பழிவாங்குவதாகவும் தாங்களாகவே கற்பனை செய்துகொண்டு கொன்றுகுவித்த கோமாளிகள் வரலாற்றில் உண்டு.

எதையாவது இப்படிப் புரியாமல் செய்து கொண்டிருந்தால் அது ஓநாய்க்குச் செய்யும் வேலை; புரிந்தும் அதையே செய்துகொண்டிருந்தால் அது ஓநாயாகவே செய்யும் வேலை! சிலுவைப் போர்கள் மட்டுமல்லாமல் இன்றுவரை கிறிஸ்தவத்தின் பேரால் செய்யபடும் எதற்கும் கிறிஸ்துவின் அங்கீகாரம் கிடையவே கிடையாது. அதற்கு உதாரணம் மத்திய ஆப்பிரிக்க குடியரசில் சென்றவருடம் நடைபெற்ற சில கிறிஸ்துவிரோதச் செயல்களில் இருந்து, ஊழியம் என்று எல்லாக் காலங்களிலும் அட்டூழியம் செய்வதுவரை அனைத்தும்! இதைத்தான் அன்றும் செய்தனர். இவை எதற்கும் இயேசுக்கிறிஸ்துவுக்கு மட்டுமல்ல, அவரைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கும் எவருக்கும் உடன்பாடு கிடையாது. அவையெல்லாம் வேறு கிறிஸ்துவுக்குச் செய்யப்படுபவை. அதற்கும், நம் இயேசுக் கிறிஸ்துக்கும், கிறிஸ்தவத்திற்குமே சம்பந்தம் கிடையாது.

தாங்களாகவே கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்களாகவும், தங்களையே கிறிஸ்துவின் புத்திரர்களாகவும் அதிகாரங்களைக் கையில் எடுத்துக்கொண்டு அக்கிரமங்களைச் செய்துகொண்டிருப்பவரைக் குறித்த கிறிஸ்துவின் உரையாடலைக் கொஞ்சம் கவனியுங்கள்:

அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

வீட்டெஜமான் எழுந்து, கதவைப்பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத்திறக்க வேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.

ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்!!! லூக்கா 13:22-27

இயேசு இப்படிச் சொல்லியிருப்பதே இப்படி அதைச் செய்தேன் இதைச் செய்தேன் உம்நாமத்தில் என்று எதையெதெயோ செய்துகொண்டிருக்கும் கூட்டத்துக்காக. அவர்கள் முடிவு பரிதாபமே!

இப்போது சிலுவைப் போர்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள்:

சிலுவைப் போர்கள் (Siluvai Poargal) என்பவை 1096 முதல் 1291 வரை நடைபெற்ற தொடர்ச்சியான மதத்தின் பெயரால் நடந்த நாடுபிடி யுத்தங்கள்தான். ஐரோப்பாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், மத்திய கிழக்குப் பகுதியை (கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான எருசலேம் புனித நிலம் உட்பட) ஆட்சி செய்த முஸ்லிம்களுக்கு எதிராகப் போரிட்டனர்.

ஏன் சிலுவைப்போர்கள்? ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் எருசலேம் மற்றும் பிற “புனித நிலப்” பகுதிகளை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்ற விரும்பினர். கத்தோலிக்க திருச்சபையின் தலைவர்களான போப்பாண்டவர்கள் மேலும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள விரும்பினார். அப்போது இருந்த பைசாந்தியப் பேரரசு துருக்கியர்களுக்கு எதிராகச் செல்ல அப்போதிருந்த போப்பிடம் உதவி கேட்டது.

முக்கிய நபர்கள் யார்? ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளைச் (குறிப்பாக பிரான்ஸ்) சேர்ந்த கிறிஸ்தவ வீரர்களை இணை படைகளை உருவாக்கினர். அவர்கள் அப்போதிருந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் வீரர்களுக்கு எதிராகப் போரிட்டனர், அவர்களில் மிகவும் பிரபலமானவர் சலாவுதீன் (Salavudeen).

ஒரே ஒரு போர் அல்ல. சிலுவைப் போர்கள் பலகட்டமாக நடந்தன (குறைந்தது எட்டு பெரிய போர்கள், மேலும் பல சிறிய போர்கள் அவற்றில் அடக்கம்). முதல் சிலுவைப் போர் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் “வெற்றிகரமானதாக” இருந்தது, காரணம அவர்கள் எருசலேமைக் கைப்பற்றியதே

ஜெருசலேம் கை மாறியது. கிறிஸ்தவர்கள் எருசலேமை சிறிது காலம் வைத்திருந்தனர், ஆனாலும், பின்னர் முஸ்லிம்கள் அதை மீட்டுக்கொண்டனர். எனவே இதற்கான யுத்தங்கள் பல முறை நடந்தன.

வீரர்களும் கோட்டைகளும்: சிலுவைப் போர்கள் டெம்பிளர்ஸ் (Templars) மற்றும் ஹாஸ்பிடல்லர்ஸ் (Hospitallers) போன்ற வீர-துறவிகளின் பிரிவுகள் எழுச்சி பெற வழிவகுத்தன. அதன் விளைவாக இந்தக் காலத்தில் மத்திய கிழக்கில் பல கோட்டைகள் கட்டப்பட்டன.

வர்த்தகமும் பயணமும் அதிகரித்தன. நிறைய சண்டைகள் நடந்தாலும், சிலுவைப் போர்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் அதிகரிக்க வழிவகுத்தன. ஐரோப்பியர்கள் புதிய சந்தைகளை உருவாக்கினர். மேலும், புதிய கலாச்சாரங்கள் மற்றும் சமூகச்சிந்தனைகளைப் பற்றியும் கற்றுக்கொண்டனர்.

மோசமான விஷயங்களும் நடந்தன. முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள யூத மக்களுக்கு எதிராகவும் நிறைய வன்முறைகள் நடந்தன. நான்காவது சிலுவைப் போர், கான்ஸ்டான்டினோபிள் ( இது உண்மையில் ஒரு கிறிஸ்தவ நகரம்!) மீது கூட தாக்குதல் நடத்தியது. இறுதி முடிவு இறுதியில் சிலுவைப்போராளிகள் தோற்கடிக்கப்பட்டனர். முஸ்லீம்கள் மத்திய கிழக்குப் பகுதியின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக் கொண்டனர்.

வரலாற்று ஆர்வலர்கள் உண்மையில் இப்போர்கள் அதை நடத்தியவர்களுக்குப் பெரிய அளவில் பயனைத்தரவில்லை என்றே கூறுகின்றனர். போரை நடத்தியவர்கள், சிலுவையின் பெயரால் நடத்தினாலும், பெரிதாகக் கிறிஸ்தவத்தை வளர்க்கும் முயற்சியில்கூட ஈடுபடவில்லை. வரலாற்றின் கருப்புப்பக்கங்களில் இடம்பிடித்தது மட்டுமே நடந்தது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *