
‘சிங்கங்கள் புத்தகம் எழுதாத வரை, வேட்டைக்காரன் தன்னைக் குறித்துதான் பெருமையாக எழுதிக் கொண்டிருப்பான்’ என்று ஒரு ஆப்பிரிக்க பழமொழி உண்டு. எழுத்தாளர்கள் அனைவருக்குமே உள்ளதை உள்ளபடி எழுதுவது என்பது இயலாது. ஸ்டைல் என்கிற பேரிலாவது தங்களை எழுதுவதில் கலந்துகொண்டிருப்பார்கள். வரலாறும் அப்படித்தான். அக்கால மன்னர்களைத் தாண்டி வரலாற்று ஆசிரியர்கள் உண்மையை மட்டும் எழுதியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். இதை வரலாறு படிப்பவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். யுவான் சுவாங், பாஹியான் போன்றவர்கள் எல்லாம் அந்த வகையறாக்கள். அவர்கள் எழுதியவை எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பித்தான் நாம் வரலாறு படித்தோம்.
புலிகளால் எழுதப்படாவிட்டாலும் “குமாயுன் புலிகள், ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை” போன்ற புத்தகங்களில் அனுபவக் கட்டுரைகளை ஜிம் கார்பட் கொஞ்சம் உண்மைத் தன்மை வெளிப்படுமாறு எழுதியிருப்பார். (ஜிம் கார்பட், தேர்ந்த வேட்டையாடி, அவரது புத்தகங்கள் எல்லாம் செம திரில்லர் கட்டுரைகள். முடிந்தால் வாசியுங்கள்).
ஆனால் இந்த ஒரு புத்தகத்தின் கதை வேறு. இதை மனிதர்கள்தான் எழுதினார்கள். ஆனால், அவர்களாகவே எழுதிவிடவில்லை. வேதாகமம் தான் அப்புத்தகம். இதுவும் சிங்கத்தின் கதைதான்.
நம் வேதாகமம் மனிதர்களால் மாத்திரம் எழுதப்பட்டிருந்தால் அவர்களே தங்களை உயர்த்திக்கொண்டுதான் எழுதி இருப்பார்கள். அதில் மனிதனின் அடிப்படையான பிரச்சனைகளான பாவம், வீழ்ச்சி போன்றவற்றின் வரலாறு இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால், வேதாகமத்தை தங்கள் விருப்பப்படியெல்லாம் மனிதர்கள் எழுத அனுமதிக்கப்படவில்லை. பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலே எழுத வைத்தது. இதனால்தான் மனிதனுடைய வீழ்ச்சியை எந்தப் புத்தகத்திலும் இல்லாமல், இந்தப் புத்தகத்தில் மட்டுமே வாசிக்கமுடிகிறது. தன் நிலை உணர்ந்தவர்கள், தனக்கான மீட்பரை ஏற்றுக்கொண்டதையும் வாசிக்கலாம். விழுந்துபோன தன்னைக் கொண்டே அவர் செய்யும் மேலான திட்டங்களை மகிழ்வுடன் எழுதியதும் இப்படித்தான். தங்களில் ஒருவராக இறைவனே வந்ததைத் தேடித்தேடி ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எழுதினார்கள்.
இதில் பாவத்தில் விழுந்தவர்கள் எவ்வளவு அதிகாரம் பெற்ற மனிதராக இருந்தாலும் அதை மறைக்கவில்லை. இராஜாக்களாக இருந்தாலும் அவர்கள் வீழ்ச்சிகள் மறைக்கப்படவில்லை. அவர்கள் நினைத்திருந்தால் சுயபுராணங்களால் தோல் சுருள்களை நிரப்பி இருக்கமுடியும். தேவனை அறியாத ஒரு கல்தேய இராஜாவின் வீழ்ச்சி எழுச்சி எல்லாம் உத்தமமாக எழுதப்பட்டிருக்கிறது. அந்த இராஜா ஒரு சக்கரவர்த்தி. தான் புல்மேய்ந்த கதையை எழுத அவர் எதிர்ப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இதுபோக, இயேசுக்கிறிஸ்துவிடமே டிரெய்னிங் எடுத்திருந்தாலும் அவரைவிட்டு ஓடிப்போன சீஷர்களே தங்களைப் பற்றி ஒத்துக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். ஒருவர் புதிய ஏற்பாட்டின் பாதியை எழுதியவர். அவரது முன்வாழ்க்கை மிகவும் முரட்டுத்தனமாக இருந்தது. அதை அவர் எல்லா இடங்களிலும் மறக்காமல் தெரிவிக்கிறார்.
மனம்திரும்புவதுதான் ஒரு மனிதனின் பெருமைக்கு முன் இருக்கும் மிகப்பெரிய சவால். ஆனால் வேதம் முழுவதும் வீழ்ச்சி மட்டுமல்ல பல மனிதர்களின மனம்திரும்பும் வரலாறாக ஏகப்பட்டது இருக்கிறது. தங்களுக்குப் புரியாதைக்கூட ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இயலாமையில் கதறி அழுததைச் சொல்லி இருக்கிறார்கள். கஷ்டங்களில் கடவுள் இருந்ததைச் சிலாகித்திருக்கிறார்கள். பின்வரும் சந்ததிக்கு பாசாங்காக எதையும் விட்டுச்செல்லாமல் உண்மையை உண்மையாக எழுதி இருக்கிறார்கள்.
ஒரு சிங்கத்தால் தன் கதையை எழுத இயலாமல் இருக்கலாம். ஆனால், இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கமான யூதாவின் இராஜசிங்கம் தன் வரலாற்றை மனிதர்கள் மூலமாக எழுதியிருக்கிறார். தான் படைத்த மனிதர்களை அவர் அற்பமாக எண்ணாமல், அவர்களைத் தன் வரலாற்றில் இணைத்துக்கொண்டார். அதனால்தான் இன்றுவரை இந்தப் புத்தகம் வெறும் தோல் சுருள், காகிதம் என்று நில்லாமல் எல்லாருடைய இருதயங்களிலும் எழுதப்பட்டதாகவும் இருக்கிறது.