
பூமியும் வானமண்டலங்களும் (cosmos) பிசாசின் அதிகாரத்துக்குட்பட்டவை. குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட்ட அதிகாரம் அவனுக்கு அங்கே உண்டு. எதிரி ஆதிக்கம் செலுத்தும் நம் பகுதி (Enemy occupied Territory) எனலாம்.
தேவனுடைய அதிகாரத்துக்குட்பட்டு பிசாசுக்கும், அதேபோல, அவரது சுதந்திரத்தில் பங்குள்ளவர்களாகிய நமக்கும் சில அதிகாரங்களை தேவனே அளித்துள்ளார். அவரவர் அதிகாரத்துக்குட்பட்ட எல்லையில் அவரவருக்கு வல்லமை உண்டு. ஆனால், எல்லை தெரிந்திருப்பது அவசியம். பிசாசு தன் குணக்கேடால் எல்லை மீறுபவன். ஆனால், நமக்கோ எல்லை மீறும் வேலை இல்லை, காரணம் நம் அதிகாரம் தேவ இராஜ்ஜியத்துக்குட்பட்டது. அதில் அவர் இராஜாவாக இருப்பதால், அவர் கொடுத்த அதிகாரத்தையும் அவர் அனுமதி இன்றி பயன்படுத்த இயலாது.
பிசாசு யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க வேண்டியதில்லை. ஆனால், நாம் தேவனுக்குக் கணக்கு ஒப்புவிக்க வேண்டிய அவருடைய சீஷர்கள். சில அதிகாரம் அளிக்கப் பெற்ற உக்கிராணக்காரர். இந்த அடிப்படைகளைப் புரிந்துகொண்டால் நாம் செயல்பட வேண்டியவிதம் விளங்கும்.
பிசாசை நம் தனிப்பட்ட வாழ்வில் எதிர்க்க சீஷர்களாகிய நம் அனைவருக்குமே அனுமதி மற்றும் அதிகாரம் உண்டு. அதைச் செய்யாவிட்டால் பரிசுத்ததிற்கு ஆபத்து. தேவனுக்குக் கீழ்படிந்த யாவரும் பிசாசை எதிர்க்கலாம். வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வுவாழ, பிசாசின் தந்திரங்களை அறிந்திருப்பதும், அவனை ஓடிப்போகும் வண்ணம் எதிர்க்கவும் நமக்கு தேவன் அளித்த அதிகாரத்தில் உரிமை உண்டு. நீங்கள் திருமணமான ஆண் என்றால், உங்கள் குடும்பத்திற்கான – குறிப்பாக குழந்தைகளுக்கான அதிகாரமும் உங்களிடம் தேவன் தருகிறார். ஆனால், பிசாசை அழிக்க, சபிக்க அதிகாரம் சர்வவல்லவருக்கே உண்டு. அதைச் செய்யவிருப்பவர் சர்வ வல்லவர் ஒருவரே! நீங்களும், நானும் அல்ல.
மாறாக, வேண்டாத வேலைகளில் தேவ அனுமதியின்றி இறங்குவோமானால், கண்ட இடங்களில் அடிவாங்க வேண்டிவரும். அப்படி வாங்கியவர்கள் உண்டு. நமக்கு வேண்டுமானால் அவர் வெளிப்புறமாக வெற்றிகரமான ‘பிசாசு ஓட்டியாகத்’ தெரியலாம்.!