
ஒருவேளை பூமிக்கு வராமல் இருந்திருந்தால்? அவர் நமக்காக மரிக்காமல் இருந்திருந்தால்? தன்னால் இரட்சிப்பட்டவர்களாக தன் சரீரமான சபையை பூமியில் அவர் ஸ்தாபிக்காமல் இருந்திருந்தால்?
உலகமெங்கும் அவரது சீடர்கள் பரம்பி இன்றுவரை அவரது அன்பின் நீட்சியாகச் செயல்படாமல் இருந்திருப்பார்களானால் இன்று எப்படி இருந்திருப்போம்? எல்லா வசதிகளையும் அருகருகே கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த நமக்கு, மொபைலிலும், போக்குவரத்திலும், இணையத்திலும் இனி வரும் காலங்களில் ஆர்டிஃபிஷ்யல் இண்டலிஜென்சிலும் இன்னமும் கணக்கிலடங்கா வசதிகளைப் பெற்ற ஒரு சமுதாயத்தில் இருக்கும் நாம், ஒரு 2000 ஆண்டுகளுக்கு முன்னதான மனிதர்களைப் பற்றிய அபிப்பிராயம் கொண்டிப்பதில்லை.
பண்டைய காலத்தில் உலகமெங்கும் கவலைப்பட வேண்டிய விஷயங்கள் ஏகப்பட்டவை இருந்தன. “இன்றைய கால வாழ்வியல் மதிப்பின்படி, அது பூமியிலேயே இருக்கும் நரகம் போன்றதாகத்தான் இருந்தது” என்று எழுதுகிறார் புதிய ஏற்பாட்டுப் பேராசிரியர் ஒருவர். (ஜெரேமியா ஜான்ஸ்டன்).
ஒரிரு நூற்றாண்டுகள் முன்னர் வரை (நம் நாட்டைப் பொறுத்தவரை ஒரு நூற்றாண்டுதான்!) வறுமை, நோய், அகால மரணம், குடும்ப வன்முறை, பொருளாதார அநீதி, அடிமைத்தனம், கொடுங்கோல் ஆட்சி மற்றும் அரசியல் ஊழல் ஆகியவை இந்த பூமியில் தப்பிக்க வழி இல்லாமல் அனைவருக்கும் பெரும் பிரச்சனைகளாக இருந்தன. நீதி, சமத்துவம், கருணை, இன்று நாம் பேசும் ஜனநாயகம், மனித உரிமை, பெண்கள் முன்னேற்றம், பொது மருத்துவம், குழந்தைப் பாதுகாப்பு, கல்வி மற்றும் நலிவடைந்த மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களைப் பற்றிய எந்த யோசனையும் அப்போது இல்லை. மக்கள் கிறிஸ்துவின் தெய்வீக உணர்வோடும், கடவுளின் பிரசன்ன உணர்வோடும் வாழத் தொடங்கியபோதுதான் இவை அனைத்தும் மாறத் தொடங்கின. கிறிஸ்தவம் உலகுக்கு வழங்கிய கொடைகள் இவை. இது மறுக்க முடியாத சத்தியம்!
இதற்குக் காரணம், கிறிஸ்து உன்னிடத்தில் அன்புகூறுவதுபோல பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக என்கிற தன்னுடைய வார்த்தையை சாத்தியப்படுத்த என்னுடைய அன்பையே காட்டுகிறேன் என்று சிலுவையில் பேரன்பை வெளிப்படுத்தினார். இந்தச் சிறியரில் ஒருவருக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று சீடர்களுக்கு ஒளி காட்டினார். அந்த ஒளி உலகின் மூலைமுடுக்கேல்லாம் சென்று அங்கிருக்கும் இருள் நீங்கிப் பிரகாசிக்க, உலகமெங்கும் சென்று என்னை நற்செய்தியாக அறிவியுங்கள் என்று அனுப்பினார். அவர் அனுப்பிவர்களும் தங்கள் சிலுவையைத் தோளிலும் அன்பை இருதயத்திலும் சுமந்து சென்றதன் விளைவு இன்று உலகம் பெற்று அனுபவிக்கும் அன்பின் பரிசுகள்!
உலகம் இதை மறுக்கலாம், மறைக்கலாம். அது எதிரியின் வேலை – எந்நாளும் இருக்கும். ஆனாலும், பரமண்டலங்களில் இருக்கும் பிதாவின் சித்தம் ஒரு கல்லறையில் அடைக்கமுடியாத அவருடைய குமாரனின் அன்பினால் அவர் வரும் வரை இராஜ்ஜியத்தின் பிள்ளைகளை சோர்வடையாமல் இன்னும் முன்னேற்றங்களை அளித்துக்கொண்டே இருக்கச் செய்யும். கிறிஸ்து வந்திருக்காவிட்டால் கிறிஸ்தவம் இருந்திருக்காது என்பது உண்மை. ஆனால், கிறிஸ்தவம் வந்ததால் இழந்துப்போன நன்மைகள் பலவும் திரும்பவும் வந்து அவர் வரும்வரை தாங்கிப்பிடிக்கவும் செய்துகொண்டிருக்கிறது.