தேவன் கிருபையாக அருளும் இரட்சிப்பைப் பெற ஒரு தீர்மானம் மட்டும்போதும். ஆனால், அதன்பின் பரிசுத்தமாகுதலுக்கும் நித்தியவாழ்வுக்கு ஆயத்தமாகுதலுக்கும் ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது. இதற்குக்காரணமும் நாம் தான். முதலாவது மனிதனை தேவன் உருவாக்கித் தன் சாயலைத் தர தேவனுக்கு அதிகம் நேரம் பிடித்திருக்காது. ஆனால், இழந்துபோன சாயலை மீண்டும் அவனுள் இருத்த, இப்போது வருடக்கணக்கில் ஆகிறது.
இதற்கு என்ன காரணம் இருக்கமுடியும்? எளிதாகக் கிடைத்த அவரது சாயலின் மகத்துவத்தை, அதன் மகிமை புரியாமல் அவன் தன் சுயசித்தத்தத்தால் அளித்துப்போட்டான். மிக எளிதாக மீறுதல், அக்கிரமம், பாவம் அவ்வளவு சுலபமாக அவனுள் புகுந்ததுவிட்டது. பாவம் செய்ய யோசிக்கவெல்லாம் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமான பாவத்தை மனிதன் உடனடியாக உணர்வதுமில்லை, உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை, ஏற்றுக் கொண்டாலும் அதற்கான தீர்வைத் தேடுவதுமில்லை. தேடிக்கிடைத்தாலும் அதை உடனடியாக விரும்பி பாவத்தைவிட்டு வெளியேற நினைப்பதுமில்லை.
இப்படி ஒரு சூழலில், இனி தேவ உறவை மீண்டும் உள்நிறுத்த அதன் மகத்துவத்தையும் மகிமையையும் அவன் அறியச் செய்யத்தான் வேண்டும். அதற்காக, இயேசு சிலுவையில் செய்த உன்னதமான மீட்பைப் புரிந்துகொண்டு இனி அவரது சாயலைப் பெற்றுக்கொள்ள நமக்கு ஆகும் காலம், ‘நம் வாழ்நாள்’ என்று இருந்தால்தான் அதன் முக்கியத்துவமும், விலையும், அதற்குள் இருக்கும் இயேசுவின் தியாகத்திட்டமும் புரியும்.
எளிதாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை. நாம் மதிப்பதில்லை!. ஆனால் மீட்பையோ, கிறிஸ்து விலையின்றித் தந்துவிடுகிறார். அவரின் சாயலைப் பெற்று தேவ உறவுக்குள் வருவது இலவசம் என்று நிர்ணயித்துவிட்டார். அதற்காக மனிதன் எந்தப் பிரயாசமும் படவேண்டியதில்லை. இமயமலைக்குச் சென்று தலைகீழ்த் தவமெல்லாம் இருக்கவேண்டியதில்லை. ஆனால், பெற்ற இரட்சிப்பின் மகத்துவத்தையும் உறவின் மேன்மையையும் தெரிந்துகொண்டே ஆகவேண்டும்.
அவர் சாயலைப் பெறுவது முன்புபோல் இப்போது சுலபமில்லை! முதல் மனிதனைப்போல் ஒருநொடியில் மகாபரிசுத்தரின் சாயலை நாம் அடைந்துவிட இயலாது! அன்றுபோல் அலட்சியமாக அவரின் மேலான திட்டத்தை நாம் இன்று அணுக அனுமதியில்லை. பாவத்தின் விளைவாக நுழைந்த சாபம், அதைப் பெற இயலாத மனிதனின் கையறுநிலை, பாவமே அறியாப் பரிசுத்தரின் விருப்பம், அவரது பரிசுத்தத்துள் பங்குபெறக் செலுத்தப்பட்ட விலை என்ற அனைத்தையும் புரிந்துகொள்ளாமல் எளிதாக இரட்சிப்பை நாம் அணுகிவிடல் ஆகாது.
நம் பாவத்தின் சம்பளம் ஒரு பரிசுத்தரின் மரணம். அது நாம் பெறும் மீட்புக்குக் கொடுக்க முடியாவிலை. அதைப் பெற்றுக்கொள்ளும் நாமோ, அதற்கான தகுதியை முற்றும் இழந்தவர்களாக இருந்து, இன்று பெற்றிருக்கிறோம். பரிசுத்தமோ பரிசுத்தரின் மகாபரிசுத்தம், இம்முறை எதிரியை எதிர்த்து நின்று அவரது வெற்றியை ருசித்தல், அவர் உறவின்மேல் தொடர்ந்த வாஞ்சை, இப்படி-எல்லா சத்தியங்களையும் ஒரு வாழ்னாளெல்லாம் தொடர்ந்து கற்கிறோம். அவரது கிருபை, அன்பு, வல்லமை, நீதி, தாழ்மை, சித்தம் என்று எல்லாவற்றையும் கற்று, வெளிப்படுத்தவும் செய்கிறோம். இதற்காகத் தான் நம் வாழ்நாள்.
பின்பு, அவரது உறவின் மகத்துவத்தை அறிய அறிய, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்து அவரைச் சேரும்நாளில் அவருக்கு ஒப்பாக மாறுகிறோம்!
அவர் உறவின் மகத்துவம் அதன்பின் முழுவதும் புரிந்தவர்களாக எந்நாளும் அவருடன் இருப்போம்! அதுவே நீதியானதும் கூட.