ஒரு நேரத்தில் ஒரு அடி

அடி எடுத்துவைக்க வெளிச்சம்

இரவுகள் இருளாக இருந்த காலங்கள் அது. இன்று போல லைட் ஃபொல்யூஷன் இல்லாத காலங்கள். இன்று நகரங்களில் மட்டுமல்ல, குறுநகரங்களில் கூட ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி இருளை மறைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், சில ஆயிரம் ஆண்டுகள் முன்பு – அன்று ஒரு இரவில் ஆபிரகாமால் தேவன் வானத்தைப் பார்க்கச்சொன்ன போது சுமார் 20000 நட்சத்திரங்களைப் பார்த்து, எண்ணி இருக்க முடியுமாம். இன்று பல நாட்களில் நம்மால் அது இயலாது. நட்சத்திரங்களைக் கோள்களைப் படமெடுக்க விண்வெளிப் புகைப்பட ஆர்வலர்கள் இருளைத்தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு படமெடுக்க ஒளி பகை!

எனவே, ராத்திரி நேர இருட்டில் நடந்து செல்வது இந்தகாலத்தில் இருக்கிறதா தெரியவில்லை. கிராமப்புறங்களில் இருக்கலாம். ஆனாலும் எல்லோர் கையிலும் மொபைல்ஃபோன் டார்ச் இருக்கிறதே!  நான் கும்மிருட்டுகளில் நடந்து சென்றிருக்கிறேன். பயந்துகொண்டே தான்!.நிலா வெளிச்சமே துணை.  அது இல்லாத காலங்களில் வெளிச்சம் எங்கிருந்தோதான் வரவேண்டும். வந்த வரை பாதை தெரியும். வேகமாக நடப்பது நடக்காது.  டார்ச் மொபைல் என்று எதுவும் இல்லாத நாட்களில் பெங்களூரில் அப்படிப்பட்ட இருட்டுக்களில் பலநாட்கள் நடந்திருக்கிறேன். மெதுவாக ஒவ்வொரு அடியும் கவனமாகத்தான் வைத்துச் செல்லவேண்டும். 

தேவனுடைய வழிகாட்டுதல் நம்வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு அடியாகத்தான் பயணிக்க நம்முடன் வருகிறது என்றார் போதகர் ஜே ஆர் மில்லர். 

அப்படி ஒரு இரவில், ஒரு இருளான பாதையில் டார்ச்சை அடித்துச் சென்றால், நமக்கு முன்னால் ஒரு சில அடிப்பாதையை மட்டுமே நம்மால் பார்க்கமுடியும். அதை நாம் கையில் அந்த விளக்கைக் கையில் எடுத்துக் கொண்டு வெளிச்சம் தெரியும் வரை தொடர்ந்து முன்னோக்கி நடக்கிறோம். நடக்க நடக்க இன்னும் சில அடித்தூரம் தெளிவாகத் தெரிகிறது. கொஞ்ச தூரம்தான் தெரிகிறது என்பதால் நின்றுவிடுவதில்லை. நடக்க நடக்க வெளிச்சமும் முன்னே இருந்துகொண்டே இருப்பதால்,  நீண்ட நேரம் இருளில் ஒரு முறை கூட காலடி பிசகாமல் பாதுகாப்பாக நமது இலக்கையும் அடைந்து விடுகிறோம். ஒரு நேரத்தில் ஒரு அடி மட்டுமே தெரிந்தாலும், முழு வழியிலும் நடந்து கடப்பது இருக்கும் வெளிச்சத்தில் தொடர்வதால் இலகுவாகிவிடுகிறது.  

இந்த உதாரணம் கொண்டு கடவுளின் வழிகாட்டுதலின் முறையை விளங்கிக்கொள்ளலாம்.  அவருடைய வார்த்தை கால்களுக்கு விளக்காகப் பிரதிபலிக்கிறது. இது ஒரு விளக்கு – சுடர்விடும் சூரியன் அல்ல, அல்லது ஒரு கலங்கரை விளக்கமும் அல்ல – ஆனால் ஒரு சாதாரண, டார்ச் விளக்கு அல்லது  அந்தக்கால லாந்தர் விளக்கு. இதை ஒருவர் கையில் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இது “கால்களுக்கு” ஒரு விளக்கு, என்பதால் ஒளிகற்றைகளை நீண்டதூரத்திற்கு எரியாது.  ஒட்டுமொத்த பாதையையையும் ஒளிரச் செய்யாது – ஆனால் பயணியின் கால்கள் நடந்து செல்லும் ஒரு சிறிய சாலையில் அது மிகவும் போதுமானதாக இருக்கிறது. சரி நாமாக வெளிச்சத்தை உண்டாகலாம் என்றால், அதற்கான எரிபொருள் நம்மிடம் இல்லை. ஆக, ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் (யோவான் 11:10). உன்னை நீ உணர். உனக்குள் வெளிச்சம் காண் என்கிற புதுயுக மத (new age religion) யோசனைகள் எல்லாம் கேட்க மட்டுமே உணர்ச்சிகரமாக இருக்கும். உண்மையில் மனிதர் இருளை விரும்புகிறவர்கள். வெளிச்சத்தை வெறுக்கிறவர்கள்.

ஒரு கிறிஸ்தவனாக ஜெபம் செய்துவிட்டாலே நமக்கு எல்லாம் தெரிந்துவிடவேண்டும் என்கிற நம் ஆசை பலிப்பதில்லை. காரணம் அப்படித் தெரிந்தால் பயணம் இனிக்காது என்பதாலேயே கிடைப்பது எப்போதும் அளவான வெளிச்சமாகவே இருக்கும். கவனியுங்கள்: குறைவான அல்ல, அளவான. அதாவது போதுமான! ஒருவேளை எல்லாம் தெரிந்துவிட்டால் பாதையே மாற்ற முயற்சிக்கவும் செய்யலாம் என்பதால் தேவன் நமக்குத் தேவையான வார்த்தை தந்து போதுமான வெளிச்சம் கிடைக்கச் செய்கிறார். இதுபோக, வேதவசனம் வெளிச்சம் என்றாலும் அந்த வெளிச்சத்தைக் காணவும் தேவனிடம் இருந்தான் வெளிச்சம் வரவேண்டும். இல்லையென்றால் வசனங்கள்கூட இருளாகத்தான் இருக்கும். உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம் என்று சங்கீதக்காரன் சொல்வது இதைத்தான். (சங்கீதம் 36:9)

நமக்கோ இறைவார்த்தை எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் கிடைத்துக்கொண்டே இருக்கும். அப்படிக் கிடைத்த வெளிச்சத்தில் எப்படி நடக்கிறோம் என்பதுதான் தொடர்ந்து நடக்க உதவுகின்ற தொடரும் வெளிச்சமாக இருக்கிறது. அவரை அறிய அறிய அறிவு பெரும். அறிந்ததின்படி நடக்க நடக்க வாழ்வு செழிக்கும். எனவே, நாம் அடியடியாக நிதானமாக நடக்கலாம்.

“உம்முடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்கு, என் பாதைக்கு வெளிச்சம்!” சங்கீதம் 119:105.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *