ஒரு அதிரடி அற்புதம்

Moses and the red sea

கேள்வி: தேவன் ஒரு பெரிய அற்புதம் செய்து ஏன் அனைவைரையும் கிறிஸ்தவராக மாற்றிவிடக்கூடாது? பூமி இரண்டாகவோ, இல்லையென்றால் இந்துமா சமுத்திரம் வற்றினாலோ, எல்லோரும் அவரை ஏற்றுக் கொண்டு விடுவார்கள் அல்லவா?

பதில்: ஆஹா, நல்ல கேள்விதான், ஆனால் கொஞ்சம் நிதானமாகத் தியானித்தால் இது எவ்வளவு ஒரு அபத்தமான சிந்தனை என்பது புரியும். ஆம், இறைவனால் ஒரு மகா பிரமாண்டமான அற்புதத்தை நிகழ்த்த முடியும்தான். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ஏன் அவர் என் விருப்பபடி ஒரு அற்புதத்தைச் செய்து மொத்த உலகத்தையும் தன்னை நம்பச் செய்யவைக்கவில்லை? பொறுமையாக வாசியுங்கள் நண்பர்களே!

முதலில் ஒன்றை விளங்கிக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு உறவு. அன்பின் அடிப்படையில் இறைவனுடன் இணைக்கப்படும் ஒரு உறவு. இங்கு இறைவன் நம் மேல் வைக்கும் அன்பு முதலிலும், அவர்மேல் பின் நாம் வைக்கும் அன்பின் அடிப்படையிலும் உருவாகும் ஒரு உறவு இது!. அன்புக்கு எந்த ‘டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்” இருக்க இயலாது. அப்படி இருப்பது அன்பாக இருக்க முடியாது. அப்படி ஒருவேளை கொஞ்சநஞ்ச அன்பு வந்தாலும், அப்படி வருவது நிலைக்கவும் செய்யாது.

கிறிஸ்து இவ்வுலகில் வந்தபோது செய்த அற்புதங்கள் ஏராளம். இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன் என்று யோவான் தன் சுவிசேஷத்தின் நிறைவாக எழுதுவதைக் காணலாம். ஆனால், இயேசு செய்த அற்புதங்களையெல்லாம் கண்ட ஜனங்கள் உடனடியாக அவரை ஏற்றுக் கொண்டு பின் வந்துவிடவில்லை என்பதை குறித்துக் கொள்ளுங்கள். அவரை பிசாசுகள் கூட அங்கீகரித்தன, ஆனால், அவரைச் சார்ந்தவர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அவரால் அற்புதம் செய்யக்கூடாத அளவுக்கு அவிசுவாசம் அம்மக்களை பீடித்திருந்தது என்றும் வாசிக்கக் காண்கிறோம். (மத்தேயு 13:58, மாற்கு 6:5). அற்புதங்கள் செய்த இயேசு உண்மையில் புறக்கணிக்கப்பட்டவராகவே இருந்தார்.

அத்தனை அற்புதங்கள் செய்தும் இயேசு உண்மையில் புறக்கணிக்கப்பட்டவராகவே இருந்தார்!.

அவரால் செய்யப்பட்ட மகா அற்புதம் ஒன்றில், அப்பத்தைப் புசித்த ஜனங்கள் மேலும் சாப்பிட உணவு தருவித்துத் தருவார் என்று எண்ணியே அவரைத் தேடினார்களே ஒழிய, அவர் செய்த அற்புதத்தின்பால் கொண்ட வியப்பினால் கூட அவரைப் பின் தொடர மனமின்றி இருந்தார்கள். இதை இயேசுவே வருத்ததம் தொனிக்கக் குறிப்பிடுவதை வாசிக்கலாம்.  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்களென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 6:26. அற்புதம் நிகழ்த்தினால் மனிதன் தன்னை ஏற்றுக் கொண்டுவிடுவான் நம்ப நாமே நம்ப இயலாது என்றால், தேவன் நம்புவாரா?

பழைய ஏற்பாட்டைக் கரைத்துக் குடித்ததாக தங்களை உயர்த்திக் கொண்ட பரிசேய சதுசேயர்களுக்குக்கூட, அப்பத்தினால் அவர் ஆயிரக்கணக்கானோரைப் போஷித்த அற்புதத்தின் மகத்துவத்தை உணரமுடியவில்லை. பழைய ஏற்பாட்டில் தேவன் மன்னாவால் இஸ்ரவேலரைப் பல்லாண்டுகளாகப் போஷித்ததை இயேசுவின் அப்பத்துடன் இணைத்துப் பார்க்க அவர்களால் இயலவில்லை. அல்லது, விருப்பமில்லை. இப்படி ஒரு அற்புதத்தைச் செய்பவர் யாராக இருக்கமுடியும் என்று யோசிக்காமல், பெரும்பாலும் பொறாமையால் வெகுண்ட அற்பர்களாகவே இருந்தார்கள். அவர் நிகழ்த்திய அற்புதங்கள் அவர்மேல் அன்பையோ, குறைந்தபட்சம் பயத்தையோகூட வரவழைக்கவில்லை. மாறாக எரிச்சல் கொண்டார்கள். ஓய்வுநாளில் அற்புதம் செய்கிறார் என்று அற்பமாகக் குற்றம் சாட்டினார்கள்.

அற்புதத்தைக் காண்பவர் யாரும் வெகுவிரைவில் அதை மறப்பது உறுதி. நன்றிகொண்ட நெஞ்சம் காலப்போக்கில் கரைவதும் உறுதி. நன்றி மறக்கும் மனிதர் நம்மிடையே, நமக்குள்ளேயே உண்டு. எகிப்திலும், பயணம் முழுவதும் படுபயங்கரமான அற்புதத்தைக் கண்ணால் கண்ட இஸ்ரவேலர் காளைக் கன்றைத் தேவனுக்கு மாற்றாக உண்டுபண்ணி  – “இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே” என்று சொன்ன அக்கிரமத்தை வாசிக்கிறோமே! (யாத்திராகமம் 32:8)

நாமெல்லாம் அப்படி இஸ்ரவேலைப் போல இல்லை என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். காலப்போக்கில் எந்த அற்புதத்தையும் துச்சமாய் மதிக்கும், மறக்கும் இருதயம் கொண்டவனே மனிதன். பெருமை உயர உயர எந்த அற்புதத்தையும் உதாசீனப்படுத்தி பழைய வாழ்வுக்குப் போகத்துணியும் அற்ப நெஞ்சு ஆதாமிடம் இருந்து சந்ததி சந்ததியாக வருவது. இது தனிப்பட்ட வாழ்வில் காணும் அற்புதங்களுக்கும் பொருந்தும் நண்பர்களே. தேவன் செய்த எத்தனை அற்புதங்களை அப்படியே நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? 

பாவத்தில் இருந்து பெற்ற விடுதலையை மிஞ்சிய அற்புதம் ஏதும் இல்லை.

இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது – நமக்கு அற்புதம் என்பது பாவத்தில் இருந்து விடுதலை என்ற அந்த ஒரே ஒரு அற்புதம் மட்டுமே. அது கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் தந்த பாவமன்னிப்பு. இதை மிஞ்சி ஒரு அற்புதம் ஒன்று நம் வாழ்வில் நிகழும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றத்திற்கே அது வழிவகுக்கும். நாம் மறக்கூடாததும், மறந்தால் வேறு வாய்ப்பு இல்லாததுமான ஒரே மாபெரும் அற்புதம் கிறிஸ்து தரும் விடுதலையே

எப்பேற்பட்ட அற்புதம் நம் வாழ்வில் நிகழ்ந்தாலும் அதை மறந்துவிடலாம், அல்லது நினைவில் இருப்பது குறையலாம். ஆனால், இரட்சிப்பு என்கிற அற்புதம் மட்டும் மறக்க இயலாது. மறந்தால் பின் ஒருமுறை நடக்கமுடியாதது!

இந்த கிறிஸ்துவின் மீட்பு என்னும் அற்புதம் அவரது அன்பின் அடிப்படையில் வருவது. இதை மிஞ்சி என்ன அற்புதம் ஒன்று நிகழ்ந்தாலும் அதால் மீட்பைத் தர இயலாது. கடின மனம் படைத்த மனிதனுக்கு முன்பு வானத்தில் இருந்தோ, கடலின் நடுவிலோ, பூமி விரிந்தோ அற்புதம் நிகழ்த்திக் காட்டப்பட்டாலும் அதனால் அவனுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்பது மட்டும் உறுதி. 

நாம் மறக்கக்கூடாத ஒரு அதிசயம், இரட்சிப்பு!

‘அற்புதம் செய்ய அன்பு அவசியம் இல்லை’என்பதால்தான் பிசாசால்கூட அற்புதம் நிகழ்த்த முடிகிறது. ஆனால், நாமோ அற்புதங்களின் அடிப்படையில் அல்ல, அன்பின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட தேவ உறவில் வாழ்கிறோம். ஏனவே, நாம் அற்புதங்களை எதிர்பாத்துக் காத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நம்மேல் அன்புகொண்ட தேவனுக்குத் தெரியும் எப்போது நமக்கு அற்புதம் தேவை என்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *