
புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் ஏறக்குறைய ஐம்பது முறை வருகிறது. ஆனால், நினைவில் கொள்ளுங்கள்: இது ஒரே நபரைக் குறிப்பதல்ல! ரோமானியப் பேரரசின் தயவால் யூதேயாவை ஆண்ட ஒரு வம்சத்தின் பெயரே ‘ஏரோது’. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கி.மு. 40 வாக்கில் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
இவர்கள் யார்? ஆதிப் பிதாவாகிய யாக்கோபின் வழித்தோன்றல்கள் அல்ல; அவருடைய சகோதரன் ஏசாவின் வம்சத்தார் (ஏதோமியர்கள்). பெயரளவில் யூத மதத்திற்கு மாறியிருந்தாலும், இவர்களுடைய இரத்தத்தில் ஓடியது என்னவோ ஏதோமிய வெறிதான்!
புதிய ஏற்பாடு தொடங்கும்போது நாம் சந்திப்பது ‘பெரிய ஏரோது’ (Herod the Great). இவன்தான் பெத்லகேமில் பிறந்த பாலகனாகிய இயேசுவைக் கொல்லத் துணிந்தவன்; இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளை ஈவிரக்கமின்றி வெட்டிச் சாய்த்த மகா பாதகன்.
ஏரோதின் மகனாக இருப்பதைவிட, அவனது பன்றியாக இருப்பதே மேல் – அகஸ்துராயன்
இவனுடைய அரண்மனையே ஒரு ருத்ரபூமி! இவனுடைய ஆட்சியில் இவன் குடும்பமே தப்பவில்லை. தனக்கு எதிராகச் சதி செய்கிறார்கள் என்ற சந்தேகத்தில், தன் ஆசை மனைவி மரியாம், அவளுடைய தாய், மைத்துனன், ஏன்… தன் சொந்த மகன்கள் மூவரையும் கொன்று குவித்தான். “ஏரோதின் மகனாக இருப்பதைவிட, அவனது பன்றியாக இருப்பதே மேல்” என்று ரோமப் பேரரசன் அகஸ்துராயன் (Ceaser Agustus) இவனைப் பரிகாசம் செய்யும் அளவுக்கு இவன் ஒரு கொடூரன்.
இவன் செத்தபிறகு, இவனுடைய ராஜ்யம் இவன் மகன்களுக்குப் பங்கிடப்பட்டது. (இவர்கள் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் அல்ல).
ஏரோது ஆர்கெலாஸ்: யூதேயா, சமாரியா, இதுமேயா பகுதிகளுக்கு அதிபதி. மகா கொடுங்கோலன். இவன் சுமார் 10 ஆண்டுகள் ஆண்டான். இவன் எங்கே மொத்த ஆட்சியையும் கெடுத்துவிடுவானோ என்று பயந்து, ரோமப் பேரரசு இவனை நாடுகடத்தியது. யோசேப்பும் மரியாளும் எகிப்திலிருந்து திரும்பும்போது, இவனுக்குப் பயந்துதான் நாசரேத்துக்குப் போனார்கள்.
ஏரோது பிலிப்பு: இவன் கொஞ்சம் சாது. கோலன் மலைப்பகுதி, இதூரியா தேசங்களை ஆண்டான்.
ஏரோது அந்திப்பா: கலிலேயாவை ஆண்டவன் இவன்தான். இயேசு அதிகம் ஊழியம் செய்த பிராந்தியம் இது. ஒரு ‘நரி’ என்று கிறிஸ்துவால் அழைக்கப்பட்ட ஆசாமி இவன்தான்.
இந்த அந்திப்பா செய்த காரியம்தான் விபரீதமானது. இவன் முதலில் ஒரு அரேபிய இளவரசியை மணந்திருந்தான். ஆனால், ரோமில் வசித்த தன் சகோதரன் (இவனும் பிலிப்பு என்றே அழைக்கப்பட்டான் – ஆனால் நாடாண்ட அந்த பிலிப்பு அல்ல) வீட்டுக்குப் போனபோது, அவன் மனைவி ஏரோதியாள் மேல் இச்சை கொண்டான். அந்த ஏரோதியாளும், தன் கணவனை விட்டுவிட்டு, நாடாளும் ஆசையில் அந்திப்பாவோடு ஒட்டிக்கொண்டாள்.
இதைத்தான் யோவான் ஸ்நானகன் நேருக்கு நேராக எதிர்த்தார். “உன் சகோதரன் மனைவியை நீ வைத்துக்கொள்வது நியாயமல்ல” என்று முகத்தில் அடித்தாற்போலச் சொன்னார். அந்தக் கண்டிப்புதான், ஏரோதியாளுக்குள் உக்கிரத்தை உண்டாக்கியது.
சந்தர்ப்பம் பார்த்து, தன் மகளை ஆடவிட்டு, கணவனை மயக்கி, அந்த மகா தீர்க்கதரிசியின் தலையை ஒரு தட்டில் கேட்டு வாங்கினாள். ஒரு கள்ளக்காதலுக்காகத் தந்திரமாய், யோவான் ஸ்னானகன் என்கிற மகா தீர்க்கதரிசியைக் கொலை செய்து அந்தக் கொலைக் குடும்பத்தில் இணைந்துகொண்டான் இந்த ஏரோதும்.
இந்த ஏரோது கூட்டத்தின் ஆட்சி அதிக காலம் நீடிக்கவில்லை. கி.பி. 100-ம் ஆண்டிற்குள்ளாகவே அந்த வம்சத்தின் ஆட்சி அதிகாரம் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது.
வேதாகமத்தில், அப்போஸ்தலர் 12-ம் அதிகாரத்தில் நாம் சந்திக்கும் ஏரோது அகிரிப்பா (Herod Agrippa I) என்பவன், பெரிய ஏரோதின் பேரன். இவன்தான் அப்போஸ்தலனாகிய யாக்கோபைக் கத்தியால் வெட்டிக் கொன்றவன்; பேதுருவைச் சிறையில் அடைத்தவன். இவனும் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால், தூதனால் அடிக்கப்பட்டு, “புழுத்துச் செத்தான்” என்று வேதம் சொல்லுகிறது (கி.பி. 44).
இதற்குப் பிறகு, இவனுடைய மகன் இரண்டாம் அகிரிப்பா (Herod Agrippa II) ஆட்சிக்கு வந்தான். அப்போஸ்தலர் 25, 26 அதிகாரங்களில் பவுல் நியாயாசனத்தில் நின்றபோது, “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சமாக்குறைய என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என்று சொன்னவன் இவன்தான்.
இந்த இரண்டாம் அகிரிப்பாவே ஏரோது வம்சத்தின் கடைசி அரசன்.
கி.பி. 70-ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் இடிக்கப்பட்டபோது, இந்த அகிரிப்பா தன் சொந்த இனமான யூதர்களுக்கு ஆதரவாக நிற்காமல், ரோமர்களுக்கு ஆதரவாக நின்றான். எருசலேம் அழிந்த பிறகு இவன் ரோமுக்குச் சென்றுவிட்டான்.
சரித்திர ஆய்வாளர்களின்படி, இந்த இரண்டாம் அகிரிப்பா சுமார் கி.பி. 100-ம் ஆண்டில் மரித்தான். இவனுக்குப் பிள்ளைகள் இல்லை. ஆகவே, இவனோடு அந்த ஏரோது வம்சத்தின் ஆட்சி அதிகாரம் என்றென்றைக்குமாக முடிந்துபோனது.
சிந்தித்துப் பாருங்கள்: எந்த இயேசுவை முளையிலேயே கிள்ளி எறிய நினைத்தார்களோ, அந்த இயேசுவின் நாமம் இன்றும் உலகம் முழுவதும் அரசாள்கிறது. ஆனால், அவரை அழிக்க நினைத்த ஏரோது வம்சமோ, வாரிசு கூட இல்லாமல் வேரற்றுப் போனது. காரணம், நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும். (நீதிமொழிகள் 10:3)