
புதிய ஏற்பாட்டில் “ஏரோது” என்ற பெயர் கிட்டத்தட்ட ஐம்பது முறை குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்தப் பெயர் ஏரோது என்கிற ஒரு நபரை அல்ல – பல்வேறு நபர்களைக் குறிக்கிறது. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோதுகள் அனைவருமே கிமு 40 இல் ரோமானியப் பேரரசால் யூதேயா மீது அமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வம்சத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
இந்த ஏரோதுக்கள் ஏசாவின் வழித்தோன்றல்கள் (ஏதோமியர்கள்!). யாக்கோபின் வம்சத்தினர் அல்ல, என்றபோதிலும் அவர்களின் முன்னோர்கள் யூத மதத்திற்கு மாறியிருந்தனர். புதிய ஏற்பாடு தொடங்கும் போது, நாம் பெரிய ஏரோதை (Herod the great) சந்திக்கிறோம். இந்த ஏரோது இயேசுவைக் கொல்லப் புறப்பட்டவர். இரண்டு வயதுக்குட்பட்ட ஒவ்வொரு ஆண் குழந்தையையும் கொல்லத் துணிந்த பாதகன். ஒரு கொலைகார வரலாறு இந்த ஏரோதுக்கு உண்டு.
அவனது ஆட்சியில், அவனுடைய சொந்தக் குடும்பமே அல்லோலகல்லல்பட்டது. அவனைக் கவிழ்க்க நினைத்தார்கள் என்று தன் மனைவிகளில் ஒருவரையும், அவளுடைய தாய், அவனுடைய மைத்துனர் மற்றும் மைத்துனரின் மூன்று மகன்களைக் கொன்றவர்கள் என்று ஏகப்பட்டபேரைக் கொன்றவர்தான் இந்த ஏரோது. இப்படிப்பட்டவர், இயேசுக்கிறிஸ்துவை அழிக்க நினைத்தது ஆச்சரியமில்லை.
இந்த ஏரோது இறந்த பிறகு, அவரது மகன்கள் (ஏரோது ஆர்கெலாஸ், ஏரோது அந்திப்பா மற்றும் ஏரோது பிலிப்பு) மூவரும் பாலஸ்தீன பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மூன்றாகப் பிரித்தனர். சகோதரர்கள் என்றாலும் இந்த மூவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் அல்ல. யூதேயா, சமாரியா மற்றும் இதுமேயா ஆகிய இடங்களில் ஏரோது ஆர்கெலாஸ் அதிகாரியாக வைக்கப்பட்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்கெலாஸ் அகற்றப்பட்டார்.
அவரது ஒன்று விட்ட சகோதரனனான ஏரோது பிலிப் கிலவுதியு கோலன் மலைப்பகுதி, கிழக்கு யோர்தான் பகுதிகளை ஆட்சி செய்தார். ஏரோது அந்திபாஸ் கலிலேயாவை ஆட்சி செய்தார். ஏரோது அந்திப்பா தனது ஆட்சியின் ஆரம்பத்தில், ஒரு அரேபிய இளவரசியை மணந்தார். இவர் தன் இன்னொரு சகோதர் ஏரோது பிலிப்புவைக் காணச் சென்றபோது அந்த பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளின் மீது ஆசைவைத்தார். ஏரோதியாள் “முறையாக” விவாகரத்துப் பெற்று அந்திப்பாசைத் திருமணம் செய்து கொண்டார்.
யோவான் ஸ்னானகன் இதை எதிர்த்தார். பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக என்று சொன்னது பிலிப்புவின் முன்னாள் மனைவியும் இன்னாள் அந்திப்பாசின் மனைவியுமான ஏரோதியாக்கு உக்கிரத்தை உண்டுபண்ணியது. தந்திரமாய், யோவான் ஸ்னானகன் என்கிற மகா தீர்க்கதரிசியைக் கொலை செய்து அந்தக் கொலைக் குடும்பத்தில் இணைந்துகொண்டார்.