
ஒரு பொடியன் மூலையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு “ABECDE…” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அவன் அம்மா வியப்புடன் அவனிடம் “தம்பீ… நீ என்ன செய்யுதே?” என்றார்கள்.
அதற்கு அவன் “நா ஜெவம் பண்ணுதேன்…” என்றான்.
“ஓ, ஆனா, நீ ABCD..ந்னுல்ல சொல்லிக்கிட்டு இருக்கிறமாதிரித் தெரியுது”
“ஆமாம்மா…நீங்க ஜெவம் பண்ணச் சொன்னீங்க. எனக்கு நீங்க சொல்லித்தந்த ஜெபம் மறந்திருச்சி…அதுனால, ஆண்டவரே எனக்கு ஜெபிக்கதெரியாது… நா ABCD ஃபுல்லாச் சொல்றேன். அந்த எழுத்துக்களை வச்சி நீங்களே ஜெபம் பண்ணீக்கோங்க என்று சொல்லிவிட்டேன்” என்றானாம்.
நம் ஜெபங்கள் மிகுந்த கருத்துச் செறிவோடும் அர்த்தம் பொருந்தியதாகவும் இறையியல் ஆழமிக்கதாகவும் இருப்பது நல்லதே. அது முதிர்ச்சியின் அடையாளம். ஆனால், அதுதான் ஜெபம் அல்ல; துவக்க காலங்களில் அது சிறுபிள்ளை ஜெபமாக இருந்தாலும் போதும். இங்கு அவசியமானது என்னவென்றால் – முதலில் ஜெபிக்கத் துவங்குவது; அதன் பின் வளர்ச்சி என்கிற அருமையான விஷயம் அவரை அறிய அறிய வரும்.
இதுபோக சில நேரங்களில் என்ன இறையறிவு இருந்தாலும் அவையெல்லாம் கைவிட்டுவிட்டது போன் சூழலைக்கூடச் சந்திப்போம். ஆனால், அன்று வார்த்தைகள்கூட இன்றி அவர் பாதம் அமர்ந்திருப்பது அவசியமானது.
அப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியது என்னவென்று தெரியாமல் இருக்கிறதினால், ஆவியானவர்தாமே சொல்லிமுடியாத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர் 8:26 (IRV)
(குட்டிக்கதை, குறும்தியானம் – கோரி டென் பூம் அம்மா அவர்கள் – மாற்றங்களுடன்)