எதெல்லாம் சரியாக இருக்க வேண்டுமோ…அதெல்லாம்

கோல்டிலாக்ஸ்

முன்பு ஒரு பதிவில் கோல்டிலாக்ஸ் என்கிற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தேன். இதற்குச் சரியான ஒற்றைப் பதம் தமிழில் என்னவென்று தெரியவில்லை. இதைச் “சரியான, பொருத்தமான” என்று சொல்லலாம். 

“கோல்டிலாக்ஸ்” என்ற இந்தப் பதம்,  “கோல்டிலாக்சும் மூன்று கரடிகளும்” என்ற சிறுவர் கற்பனைக் கதையிலிருந்து வந்த ஒரு சொல். (ஆங்கிலத்தில் இதுபோன்று பல வார்த்தைகள் புதுசு புதுசாகத் தோன்றுவதுண்டு). இக்கதையில் வரும் கோல்டிலாக்ஸ் ஒரு சிறுமி. அவள் அங்கு கஞ்சி நிரப்பப்பட்ட கோப்பைகளில் ஒன்றை “மிகவும் சூடாக”, இன்னொன்றை “மிகவும் குளிராக” மற்றும் ஒன்றை மட்டும் “சரியாக” – அருந்த ஏற்றவாறு சரியாக இருப்பதைக் காண்கிறாள். உணவின் சுவை அது சரியான சூட்டில் இருப்பதிலும் இருக்கிறதல்லவா?

வானவியல் அறிஞ்சர்கள் எப்படியோ இந்த வார்த்தையைப் பிடித்துக்கொண்டனர். உண்மையில் இந்த ஒப்புமையை விண்வெளியில் ஒரு “கோல்டிலாக்ஸ் மண்டலத்தை” விவரிக்கப் பயன்படுத்துகிறார்கள். அதுவும் ஒரு விஷயத்தை விளக்கப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. 

ஒரு கோளில் உயிர்கள் இருக்க,  அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  அவை வாழ்வதற்கான மிகச்சரியான நிலைமைகள் இருந்தாக வேண்டும். அப்படி இருந்தால் அது “கோல்டிலாக்ஸ்” சூழலில் இருப்பதாக அர்த்தம்.  உதாரணமாக, பூமி சூரியனின் கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் உள்ளது, அதாவது திரவ நீர் இருப்பதற்கு ஏற்ற தூரத்தில் உள்ளது – மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இல்லை – இது உயிர்களை ஆதரிப்பதற்கு ஏற்ற சூழலாக அமைகிறது. இதுபோக மேலும் ஏராளமான சாதக சூழமைப்புகள் பூமிக்கு இருப்பதால், இதை பூமி ஒரு கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் இருக்கிறது என்கிறோம். 

அருள்நாதர் இயேசுக்கிறிஸ்துகூட இந்த பூமிக்கு ஒரு கோல்டிலாக்ஸ் நேரத்தில் வந்தார் எனலாம். அதுபற்றி நீங்கள் பிரசங்கிக்கக் கேட்டிருக்கலாம். உங்கள் வாழ்வில் பல விஷயங்கள் அப்படிப்பட்ட ஆவிக்குரிய கோல்டிலாக்ஸ் சூழலில் நடப்பதே சரியானது. ஆசிர்வாதமானது என்றும் சிந்திக்கலாம்.

யோபு 26:7, 38:33, நீதிமொழிகள் 3:19, ஏசாயா 44:24 ,சங்கீதம் 19:1, 104,5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *