உரிமையாளர்: இயேசுக்கிறிஸ்து

“நம் ஒவ்வொருவருடைய வாழ்வில் தேவன் தன்னுடையது என்று சொந்தம் பாராட்டக்கூடாத ஒரு சதுர அங்குலம் கூட இல்லை” என்றார் ஆபிரகாம் குய்பர். இவர் ஹாலந்து நாட்டின் முன்னாள் பிரதமர், நல்ல இறையிலளாரும் கூட.  இறையியல் அறிந்த போதகர்கள் எல்லாம் நாட்டின் பிரதமராக இருந்தார் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். ஆனால், பதிவு ஐயா குய்பரைப் பற்றியதல்ல. (நான் மொழிபெயர்ப்புக்காக சற்றே மாற்றி இருக்கிறேன்).

அவர் சொன்னதன் பொருள், உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதிக்கும் தேவனே உரிமையாளர். அவரால்  தமக்குச் சொந்தமானதென உரிமை கொள்ள இயலாத எந்தப் பகுதியும் உங்கள் வாழ்வில் இருக்கமுடியாது – கிடையாது!

அது உங்கள் உழைப்பாக இருந்தாலும், உங்கள் ஓய்வாக இருந்தாலும், உங்கள் படிப்பாக இருந்தாலும், உங்கள் உறவுகளாக இருந்தாலும், உங்கள் படைப்பாற்றலாக இருந்தாலும், உங்கள் முடிவுகளாக இருந்தாலும், உங்கள் நேரமாக இருந்தாலும், அல்லது உங்கள் எண்ணங்களாக இருந்தாலும் சரி, உங்கள் சோஷியல் மீடியா நேரங்களானாலும் சரி—கிறிஸ்து, “அது என்னுடையது!” என்கிறார்.

அவர் உங்கள் ஞாயிறு காலை ஆராதனைகளுக்கும், ஆலய ஊழியங்களுக்கும் மாத்திரம் கர்த்தர் அல்ல.

ஒரு நாட்டின் இராஜாவுக்கு அந்த நாடு சொந்தம். உங்கள் வீடு, உங்கள் தொழில், உங்கள் அரசியல், உங்கள் தொழில்நுட்பம், உங்கள் கலை, உங்கள் பேங்க் பேலன்ஸ்— என்று எல்லாவற்றிற்கும் அவரே உரிமையுள்ள இராஜா. தேவனுடைய இராஜ்ஜியத்தில் இருக்கும் எல்லாம் – எல்லாரும் அவருக்குச் சொந்தம்.

நாம் பெரும்பாலும் “மதச்சார்பற்ற” அல்லது “நடுநிலை” என்று கருதும் வாழ்க்கையின் மூலைமுடுக்குகளிலும்கூட, இயேசு  இருக்கிறார், அங்கேயும் அவருடைய ஆளுகைதான் இருக்க வேண்டும். எனவே, நீங்கள் எங்கு நின்றாலும், என்ன செய்தாலும், அவர் அதைச் சுட்டிக்காட்டி, “இது எனக்குச் சொந்தமானது” என்கிறார். நாம் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள் (1 கொரிந்தியர் 6:20) என்பதை நினைவில் இருத்திக்கொள்வது அவசியம். அந்த விலைக் கிரயம் நம்மால் கற்பனை செய்ய இயலாத அளவு அதிகம்!

எனவே, நமக்கு அவர் தந்திருப்பது அவரை ஆராதனையில் மாத்திரமல்ல, அன்றாட வாழ்க்கையிலும் கனம்பண்ணும்படி வாழும் வாழ்க்கை!  ஏனெனில் கிறிஸ்துவின் பார்வையில், “சாதாரண அன்றாட வாழ்க்கை” என்று ஒன்று கிடையாது. எல்லாமே அவருடையதுதான் என்பதால், எதுவும் சாதாரணமானது இல்லை. Private life- என்று ஒன்றும் நமக்கில்லை!

இது ஒரு அழைப்பாக இருக்கட்டும்:

உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலமும் இயேசுவுக்குச் சொந்தமானதுபோல வாழுங்கள்—ஏனென்றால் அது அப்படித்தான் இருக்கும். இருந்தாகவேண்டும். இது ஒருவேளை உங்களுக்குக் கொஞ்சம் பிடிக்காததுபோல இருந்தால் உங்களுக்க்கு மேலும் சில வார்த்தைகள். 

“உங்கள் வாழ்வில் அவர் இருக்கும் ஒவ்வொரு சதுர அங்குலமும் ஆசிர்வாதமானதுதான்”.!

நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர். (1 கொரிந்தியர் 3:23)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *