உபதேசங்களாகக் கற்றுக்கொள்ளுங்கள்

Doctrine - உபதேசங்கள்

வசனங்கள் நம் இருதயத்தில் இருப்பது மிகவும் அவசியம். ஆனால், வசனங்களை மாத்திரம் அறிந்து வைத்திருக்காமல், முழுமையான உபதேசங்களையும் அறிந்து வைத்திருப்பதுதான் கிறிஸ்த வாழ்வின் வெற்றி இரகசியம். யோவான் 3:16இல் இரட்சிப்பு இயேசு வழியாக என்று அறிந்து, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவ மன்னிப்பைப் பெற்று கிறிஸ்தவராக சபையில் சேர்க்கப்படுவது என்பது அந்த ஒற்றை வசனத்தால் நடப்பது அல்ல. மாறாக ஒரு முழுமையான இரட்சிப்பின் சத்தியத்தை உபதேசமாக அறிந்திருப்பதன் மூலம்தான்.

கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படை உபதேசங்களை பல வசனங்களை ஒன்றாக இணைத்து அறிந்து, அதன்பின் அதைத் தொடர்ச்சியாக மேலும் பல வேத பகுதிகளுடனும் விளக்கங்களுடனும் இணைந்து அறிந்து வளர்வது ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் மிகவும் அவசியமானது. இதில் சுணக்கம் காட்டினால், விரக்தி அவ்வப்போது ஆட்டிப்படைக்கும்.

உதாரணமாக, இயேசு நம்மை நேசிக்கிறார் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அந்த அன்பைப் புரிந்துகொள்ள பிதாவனவரின் அன்பால் அவர் அனுப்பப்பட்டார் என்பதும், அந்த அன்பை நாம் தொடர்ந்து புரிந்து அந்த அன்பின் நிலைத்திருப்பது என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் அன்பை ஊற்றி அதன் வழியாக நம்மை அன்பில் வளர்க்கிறார் என்பது அடுத்த நிலை உபதேசம். நாம் இல்லாத பொழுதே தேவன் அன்பானவராகத்தான் இருந்தார் என்பதை அறிந்தால், பாவிகளாகிய நம்மேல் அவர் காட்டிய அன்பு இன்னும் விளங்கும். அதுவே அன்பு என்றால் என்ன என்பதை விளக்கும். இதுபோன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.

மேற்சொன்ன உதாரணத்திலேயே இன்னொரு உபதேச உதாரணம் உள்ளதைக் கவனியுங்கள். இதில், மூவர் வந்துவிடுகிறார்கள். ஆக, இன்னொரு உபதேசமாக திரியேகத்துவத்தை அறிந்திருப்பது மிகமிக அவசியம். இல்லையென்றால் துர் உபதேசங்களுக்குள் செல்ல நேரிடும். வசனங்களால் இணைக்கப்பட்டதுதான் உபதேசம். அதை இணைப்பவர் தேவனே. புரிந்துகொள்ள உதவுபவரும் அவரே. எனவே, உபதேசங்களைச் சரியாக அறிந்துகொள்ள ஆர்வம் காட்டியே தீரவேண்டும். இப்படித் தொடர்புள்ள உபதேசங்களைக் கற்றுக்கொண்டே இருப்பதே ஆத்தும வளர்ச்சிக்கு ஆதாரம்.

நீங்கள் எந்தச் சபைக்குச் சென்றாலும் சரி, அடிப்படைச் சத்தியங்களைச் சரியாக அறிந்திருப்பது அவசியம். நீங்கள்தான் அதற்குப் பொறுப்பாளி. அப்படி அறிந்தபின், தனிப்பட்ட வளர்ச்சிக்கு போதிக்கப்படும் உபதேசங்கள் எந்த அளவுக்கு வேதம் காட்டும் உபதேசமாக இருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள அந்த உபதேசத்தில் இணைக்கப்படும் வசனங்கள் எவை என்பதை உற்று நோக்குங்கள். வேதம் தன்னில்தான் முரண்படுவதில்லை. ஆனால், முரண்பாடுள்ள மனிதர்கள் முரண்களை சுய வியாக்கியானங்களால் புகுத்துவது நடைபெறுகிறது என்பதால், வசன இணைப்புகள் எப்படி இருக்கின்றன என்பதைச் சரியாகக் கவனிப்பது நம் கடமையே.

ஊழியம் செய்யவேண்டும் என்பதற்கு ஒரு வசனத்தைக் காட்டிச் சொல்லிவிடலாம். ஆனால், எப்படி ஊழியம் செய்யவேண்டும் என்பதை ஒரு உபதேசமாகத்தான் அறிந்திருக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு ஆர்வத்துடன் எதையோ ஊழியம் என்று ஒரு உத்வேகத்தில் செய்யப்போய்ப் பின் வேகம் குன்றி விரக்தி கொள்ள நேரிடலாம்.

ஆனால், உபதேசங்களில் வளர்வது என்பது பொசுக்கென்று ஒரே நாளில் நடைபெறுவதில்லை. அது வளர்வது! எல்லாரும் எல்லாவற்றையும் உடனடியாக விளங்கிக்கொள்வதும் இயலாது. என்றாலும், ஒவ்வொருவருக்கும் அடிப்படைத தேவை அந்த உபதேசங்களில் ஆர்வம். ஆசை.! கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தணியாத வாஞ்சை! இது நேரம் எடுக்காமல் குறுக்குவழியில் நடைபெறுவதில்லை. நேரமில்லை என்பவர்கள் இங்கு நிறுத்தி நேரம் கொடுத்தே ஆகவேண்டும். சரியாக உபதேசங்களை அறிந்துகொள்ளச் செலவிடும் சில மணி நேரங்கள், உங்கள் வாழ்வில் பிற்காலங்களில் நேரத்தை வீணாக்க விடாமல் பலநாட்களைச் சரியாக நடத்த உதவும். பல காலங்கள் முன்னேறிச்செல்லத் துணையாக வரும். இதற்கும் உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். விசுவாசம் என்றால் என்ன என்கிற உபதேசத்தைக் கற்று அதன்வழியாக விசுவாசத்தை வளர்த்து வருவீர்களானால், நீங்கள் விசுவாசிக்க முகாந்திரமில்லாத நேரங்களில் நீங்கள் கற்ற உபதேசம் உங்களை விசுவாசத்தில் நிற்கச் செய்யும். மாறாக, ஒரே ஒரு வசனம்தான் உங்களுக்குத் தெரிந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். “நீ விசுவாசித்தால், தேவ மகிமையைக் காண்பாய்!”. இது ஆண்டவரே சொன்னது. ஆனால், இதை மட்டும் அறிந்திருக்குக்கும்போது விசுவாசம் தேவைப்படும் நேரத்தில் உதவி செய்யவருவது சந்தேகம்தான்.

சரி, உபதேசங்களை அறிந்திருந்தால் மட்டும்போதுமா? என்றால் நிச்சயம் இல்லை. உபதேசங்கள் நம்மில் செயல்படவேண்ட நாம் அனுமதிக்க வேண்டியது அறிந்திருப்பதைப் போன்றே அவசியம். உபதேசங்களுக்குச் செவிசாய்த்து நடப்பதுதான் உபதேசங்களின் நிறைவு! நம்முடைய கீழ்படிதலில், கற்ற உபதேசங்கள் நிறைவு பெறுகின்றன. உதாரணமாக, இறை அன்பைக் குறித்த உபதேசங்களை அறிதல், நம்மிடத்தில் அன்புகூர்தலை நடத்தி, பிறரிடத்தில் அன்புகூரச் செய்வதில் நிறைவடையச் செய்கிறது.

எனவே, உபதேசங்களில் ஆர்வம் செலுத்துங்கள். அவை நம்மில் செயல்பட அவற்றை முறையாகக் கற்றுக்கொள்ளுங்கள். அப்படிக் அறிந்திருப்பதில் மகிழ்ச்சிகொள்ளுங்கள். இறை உதவியோடு, அந்த சந்தோஷமே அவற்றைச் செயல்படுத்தவும் உதவும். ஒட்டுமொத்த வேதமும் அதற்காகத்தான் நம் கைகளில் தவழ்கிறது.

Benny Alexander

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *