
கோபம், எரிச்சல், பயம், வருத்தம் போன்றவை எல்லாம் “அகிறிஸ்தவ” உணர்வுகள் என்று நினைத்தால் அது தவறு.
உண்மையில் மனிதன் விழுந்ததில் இந்த சுபாவங்கள் எல்லாம் இடப்பெயர்ச்சி அடைந்துவிட்டன. விளைவு கோபம் மூர்க்கமாக, பயம் திகிலாக, வருத்தம் என்பது அவநம்பிக்கையாக – மனக்குழப்பமாக என்று சுபாவங்களின் சுபாவங்களே இருதயத்தில் அதனதன் இருப்பிடத்தைவிட்டு விலகிவிடுகின்றன. கோபம் கொண்டால் உடனே பாவம் செய்தல் அதன் விளைவுதான்.
அநீதியின்பால் கோபம் கொள்ளல், அநியாயத்தின்மேல் எரிச்சல் அடைதல், தேவனுக்குப் பயப்படுதல், பிறர் வருத்தம் கண்டு வருத்தம் அடைதல் எல்லாம் அவசியமான தெய்வீக குணங்கள். உண்மையில் இவையெல்லாம் தேவசாயலில் இருந்து வந்தவையே. ஆனால், அவையெல்லாம் இன்று சேதமாக!
மனம் புதிதாகி மருரூபம் அடைதலில் நம் வேண்டாத பல அகன்றாலும், சில சேதமானவை புதுப்பிக்கப்பட்டு அது எப்படி இருக்கவேண்டுமோ அந்த நிலையை நோக்கி மீண்டும் வருகின்றன. அவற்றில் சிலதான் மேலே குறிப்பிட்டவை.
தேவ சாயலை தேவன் நம்முள் மீண்டும் புதுப்பித்து இருத்தும்போது இழந்தவைகள், உடைந்தவைகளை எல்லாம் மீண்டும் சரியாகப் பொருத்துதல் நடக்கிறது. முன்பு பொசுக் பொசுக் என்று முன்கோபியாக இருந்தவர்கள் இன்று நிதானித்து வெளிப்படுத்துவார்கள். எதற்கெடுத்தாலும் அஞ்சுபவர்கள், இனி அச்சத்தை தேவனுக்குத் தெரியப்படுத்தி சமாதானம் பெற்றுக்கொள்ளமுடியும். அதே நேரம், பிறரை பயப்படுத்துபவர்களாகவும் இல்லாமல், தேவபயம் கொள்பவர்களாக மாறுவார்கள். இப்படிப் பல பரிமாணங்களில் சுபாவ மாற்றம் நடைபெறும் வாழ்வே கிறிஸ்தவ வாழ்வு.
எனவே, கிறிஸ்தவ கோபம் என்றால் அது கிறிஸ்துவின்கோபமாக இருக்கவேண்டும். பயம் என்றால் பக்தியுடன்கூடியதாக இருக்க வேண்டும். வருத்தம் என்றால் அது உதவிக்கரம் நீட்ட, ஜெபிக்க, அன்பை வெளிப்படுத்தி அரவணைக்கும இடமாகத் திகழவேண்டும்.
கடைசியாக இன்னொரு உதாரணம், அவர்களின் அன்புகூட முறையான, சரியான, அளவான, அறிவார்ந்த, நீதியான – தெய்வீக அன்பாக வெளிப்படும்!