
ஜனவரி 8, 1956 அன்று ஜிம் எலியட் மற்றும் அவருடைய நண்பர்களான பீட்டர் பிளெமிங், எட் மெக்கல்லி, நேட் செயிண்ட், ரோஜர் யூடெரியன் ஆகிய ஐவரும் தாங்கள் நண்பர்களாக்கி விட்டோம் என்று நினைத்து நெருங்கிய பழங்குடிகளால் தாக்கிக் கொல்லப்பட்டார்கள்.
சிறுவயதில் சண்டேஸ்கூலோடு போய்விடும் வழக்கம் மிஷனரிமார்களின் கதைகளைக் கேட்பது. வயதாக வயதாக ஊர்க்கதைகளைக் கேட்டு வளரும் காதுகளுக்கு ‘பழங்கதைகள்’ என்று அவை அதிக ஈர்ப்பை அளிப்பதில்லை. ஆனால், தேவனுடைய ராஜ்யத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழ்ந்தவர்களின் வரலாற்றை அவ்வப்போது கவனிப்பது அவசியம். அவற்றை வெறும் சுவாரசியக் கதைகளாகக் கடந்துவிடாமல், அவர்களது அசாதாரணமான விசுவாச வாழ்க்கையை அறிந்து கொள்வது நம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு ஊக்கமளிக்கும் செயல். நம் முன் சாட்சியாகப் அப்படிப்பட்டவர்களில் பலர் உண்டு. அதில் நான் விரும்பும் ஒருவர் (அல்லது இருவர்) ஜிம் எலியட் மற்றும் எலிசபெத் எலியட்.!
இவர்களுடைய வாழ்க்கை, “தன்னால் எதை தக்கவைத்து லாபமடைய முடியாதோ அதை கொடுப்பதினால் இழப்பவன் முட்டாள் அல்ல” என்று ஜிம் எலியட் சொன்ன வார்த்தைகளுக்கு உயிருள்ள சாட்சி.
தன்னால் எதை தக்கவைத்து லாபமடைய முடியாதோ அதைக் கொடுப்பதினால் இழப்பவன் முட்டாள் அல்ல!
ஜிம் எலியட் – ஒரு அசாதாரண அர்ப்பணம்
பிலிப் ஜேம்ஸ் எலியட் என்னும் ஜிம் எலியட், அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்திலுள்ள போர்லாண்ட் என்ற இடத்தில், ஜனவரி 8, 1927 அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர்கள் ஃபிரெட் எலியட் (Fred Elliot) மற்றும் கிளாரா எலியட் (Clara Elliot) ஆவர். தேவனுக்குப் பயந்து வாழ்ந்த அவரது பெற்றோர்கள், கிறிஸ்துவ விசுவாசத்தில் ஜிம் எலியட்டை வளர்த்தார்கள். மிஷனெரி ஊழியத்தில் அவருடைய அர்ப்பணிப்பு, அவருடைய விசுவாச குடும்பப் பின்னணியில் இருந்து வந்தது. சிறு வயதிலேயே கிறிஸ்துவை தனது இரட்சகராக ஏற்றுக்கொண்டார் ஜிம்.
கல்லூரிக் காலத்திலேயே மிஷனெரி ஊழியத்தில் அவருடைய உள்ளம் பற்றி எரிந்தது. தென் அமெரிக்காவின் ஈக்குவேடாரில் வாழும் ‘ஹ்யூவரானி’ (Huaorani) என்ற பழங்குடி இன மக்களைப் பற்றி கேள்விப்பட்டபோது, அவர்களுடைய இருண்ட வாழ்க்கைக்கு தேவனுடைய ஒளியைக் கொண்டு செல்ல வேண்டுமென்ற பாரம் அவருக்குள் பெருக்கெடுத்தது.
இந்த ஹ்யூவரானி பழங்குடியினரை அவர்களுக்கு அருகாமையில் வசித்த குய்சுவா (Quechua) இன மக்கள், அவர்களை “ஆக்கா” (Aucas) என்று மற்றொரு பெயரில் அழைத்தனர். ஆக்கா என்றால் “கொடூரமானவர்கள்” என்று பொருள். இப்படி அழைக்கக் காரணம், அங்கு செல்லும் வெளியாட்கள் எவரும் திரும்பி வந்ததில்லை என்பதுதான். ஆனாலும், தேவனுடைய அன்பு ஜிம் எலியட்டையும் அவருடைய நண்பர்களான பீட்டர் பிளெமிங், எட் மெக்கல்லி, நேட் செயிண்ட், ரோஜர் யூடெரியன் ஆகியோரையும் அங்கே செல்லத் தூண்டியது.

மிஷனரி நண்பர்கள் ஐவரும் துவக்கத்தில் ஒரு சிறு விமானத்தில் பறந்து சென்று பரிசுகளைப் போட்டு, நட்புறவை ஏற்படுத்திக்கொள்ளத் தொடர்ச்சியாக முயன்றனர். இறங்காமல் பரிசுகளை மட்டும் முதலில் தாழப் பறந்து சில பரிசுகளை மட்டும் போட்டுவிட்டுத் திரும்பி விடுவார்கள். அம்மக்களில் ஒருவரிருவர் கொஞ்சம் நட்பு முகம் காட்டியதாகத் தெரிகிறது. எனவே, 1956 ஜனவரி மாதம், அந்த ஐவரும் குராரே ஆற்றங்கரையில், “பாம்பீச்” என்று தாங்கள் பெயரிட்டிருந்த மணல் பகுதியில் விமானத்தை இறக்கினர். தேவனை அறியாத அந்த பழங்குடி மக்களைச் சந்திக்க, தேவனுடைய வசனத்தை அறிவிக்க, அவர்கள் ஆயத்தமாயிருந்தனர். ஆனால், தேவ சித்தம் வேறாக இருந்தது. உண்மையில் ஹ்யூவரானிகள் தங்கள் பெயருக்கேற்றார்ப் போலவே செயல்பட்டனர்!
ஜனவரி 8, 1956 அன்று, ஹ்யூவரானி பழங்குடியினர் இவர்களைத் தாக்கினர். இந்த மிஷனெரிமார்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களை வைத்திருந்தனர். ஜிம் எலியட்டும் தன்னுடன் ஒரு கைத்துப்பாக்கியை வைத்திருந்தார். ஆனால், “தேவனை அறியாத ஒருவனை கொன்று, அவனை நித்திய அழிவுக்கு உட்படுத்துவதைவிட, நான் மரிப்பதே மேல்” என்ற விசுவாசத்துடன், அவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. அவர் பழங்குடியினரை பயமுறுத்த வானத்தை நோக்கி சுட்டிருக்கலாம் என்று சில குறிப்புகள் சொல்கின்றன. ஆனால், எந்தவித எதிர்ப்புமின்றி, அந்த ஐந்து தேவ ஊழியர்களும் ஹ்யூவரானி வீரர்களால் ஈட்டிகளால் குத்திக் கொல்லப்பட்டனர் என்பதே உண்மை. அவர்களுடைய சடலங்கள் ஆற்றில் மிதந்து வந்த பின்னர் ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கப்பட்டன. நேட் செயிண்டின் கைக்கடிகாரம் 3:12 மணிக்கு நின்று போயிருந்தது. அங்கே எந்தப் போராட்டமும் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை. ஹ்யூவரானி பழங்குடிகள் நட்புக்காக வருவதுபோல வந்து அவர்களைக் கொன்று போட்டிருக்கிறார்கள் என்று அனுமானிக்கப்படுகிறது. இந்த இடத்தில், இது ஏன் இப்படி? என்கிற கேள்வி நம் மனதில் எழுவது இயல்பு. தன் பிள்ளைகளைத் தேவை கைவிட்டாரா? என்று நினைக்கக்கூடும்.
இந்த ஐந்து மிஷனெரிமார்களின் மரணம் உலகெங்கிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இது ஒரு முடிவல்ல, ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம் என்பதை உலகம் அப்பொழுது அறியவில்லை.
எலிசபெத் எலியட் – அன்பின் தொடர்ச்சி
போதகர் ஜான் பைப்பர் இம்மிஷனரி நண்பர்களில் படுகொலை குறித்து நினைவு கூறும்போது சொல்கிறார் “தேவன் நமது நன்மைக்காக நியமித்ததைத் தவிர வேறு எதுவும் நமக்கு நேர்வதில்லை. அது தீமையாக இருந்தாலும் சரி!”
இப்படிப்பட்ட ஒரு பெரும் சோகமான நிலையில் ஜிம் எலியட்டின் மனைவி எலிசபெத் எலியட் முற்றும் தைரியம் இழந்திருக்கலாம். ஆனால், தேவனுடைய கிருபை அவரைத் தாங்கியது. ஜிம் மரித்தபோது, அவருடைய மகள் வேலரிக்கு வெறும் பத்து மாதங்களே ஆகியிருந்தது. இந்தச் சூழ்நிலையில், எலிசபெத் மனமுடைந்து இனி என்ன ஊழியம்..ஊழியம் என்று செல்வதால் என்ன பிரயோஜனம்? என்று அங்கலாய்த்து நிற்கவில்லை. எனவே, கணவனுடைய மரணத்திற்குப் பிறகு, பல வருடங்கள் எலிசபெத் குய்சுவா மக்களிடையே ஊழியம் செய்யத்துவங்கினார்.
ஆனால், எலிசபெத் அம்மையார் அம்மக்களினத்துடன் நிறுத்திவிடவில்லை. ஆம், கணவனைக் கொன்ற அதே ஹ்யூவரானி பழங்குடி மக்களிடையேயும் தேவனுடைய அன்பைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பாரம் அவருக்குள் உண்டாயிற்று. மூன்று வயதான தன் மகள் வேலரியோடும், இன்னொரு மிஷனெரி ரேச்சல் செயிண்டோடும் (இவர் நேட் செயிண்டின் சகோதரி) 1958ஆம் ஆண்டு, எலிசபெத் ஹ்யூவரானி மக்களிடையே வாழச் சென்றார். இது தேவ அன்பின் ஒரு மகத்தான வெளிப்பாடு! அதன் பின் பல வருடங்கள் எலிசபெத் குய்சுவா மக்களிடையே ஊழியம் செய்தார்.
அங்குள்ள ஹ்யூவரானி பெண்கள் சிலர் உதவியுடன் அவர்களின் மொழியைக் கற்றுக்கொண்டு, அவர்களுக்குக் கிறிஸ்துவின் சத்தியத்தைப் போதித்தார். பல வருடங்கள் அந்தப் பழங்குடி மக்களோடு வாழ்ந்து, அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கொண்டு சென்றார். அவருடைய அர்ப்பணிப்பு, அந்தக் காட்டுமிராண்டி இன மக்களை கிறிஸ்துவுக்குள் கொண்டுவந்தது. பிற்காலத்தில், ஜிம் எலியட்டைக் கொன்றவர்களில் சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள் என்பதும் தேவனுடைய கிருபைக்கும் வல்லமைக்கும் அநாதித்தீர்மானத்திற்கும் பெரிய சான்று.

எலிசபெத் எலியட், தனது வாழ்க்கையின் இறுதிவரை தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். அவர் மிஷனெரியாக மட்டுமல்லாமல், ஒரு சிறந்த எழுத்தாளராகவும், போதகராகவும் இருந்தார். அவருடைய புத்தகங்கள், குறிப்பாக “Through Gates of Splendor” (மகிமையின் வாசல்கள் வழியாக) ஜிம் எலியட் மற்றும் அவரது நண்பர்களின் மிஷனெரி வாழ்க்கையையும் தியாகத்தையும் பற்றி பேசுகிறது. “Passion and Purity“, “Keep a Quiet Heart” போன்ற அவருடைய பல புத்தகங்கள் எண்ணற்ற கிறிஸ்தவர்களுக்கு ஊக்கமளித்துள்ளன. அவருடைய ரேடியோ நிகழ்ச்சியான “Gateway to Joy” உலகெங்கிலும் உள்ள அநேகருக்கு தேவனுடைய சத்தியத்தைக் கொண்டு சென்றது.
இந்த உலகம் எப்போதும் தியாகம் என்று கருதுவதைத் தேவன் ஒருபோதும் இழப்பாகக் கருதுவதில்லை
ஜிம் எலியட்டும் எலிசபெத் எலியட்டும் தங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்தவர்கள். இந்த உலகம் எப்போதும் தியாகம் என்று கருதுவதைத் தேவன் ஒருபோதும் இழப்பாகக் கருதுவதில்லை என்பதற்கு இவர்களுடைய வாழ்க்கை ஒரு மகத்தான உதாரணம். தேவனுடைய மகிமைக்காக வாழ்ந்த இவர்களுடைய ஊழியம், இன்றும் அநேகருக்கு மிஷனெரி ஊழியத்திற்குச் செல்ல தூண்டுகோலாக இருப்பதில் ஆச்சரியமில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு இவர்கள் வாழ்க்கையைக் கொஞ்சம் அறிமுகப்படுத்துங்கள். ஜிம் எலியட் குறித்த சினிமா யூடியூபில் உண்டு. ஆவணப் படங்கள், புத்தகங்கள், குறிப்புகள் , பிரசங்கங்கள் என்று பலவும் இலவசமாக உண்டு.

இத்தம்பதிகளின் மகள் வலேரி 45 வருட ஊழியங்களகளுப்பிறகு பிள்ளைகள் பேரப் பிள்ளைகளுடன் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். தங்கள் பெற்றோரின் நினைவுகளை Devotedly என்று ஒரு புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.
மீண்டும் ஒரு முறை ஜிம் எலியட் தன் நாட்குறிப்பில் தன் கைப்பட எழுதி வைத்திருந்த ஒன்றை நினைவுகூறுவோம். “தன்னால் எதை தக்கவைத்து லாபமடைய முடியாதோ அதைக் கொடுப்பதினால் இழப்பவன் முட்டாள் அல்ல!”
Benny Alexander, July 2025.