
“அறிவியல் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதனால், அறிவியலுக்கு இன்னும் சிறிது காலம் கொடுங்கள்; மதங்கள், குறிப்பாக கிறிஸ்தவம் அதன்பின் அவசியம் இல்லாமல் போய்விடும்” என்பது சில கடவுள் மறுப்பாளர்களின் வாதம். அதாவது, அறிவியல் வளர வளர, இறைவன் தேவையற்றவர் ஆகிவிடுவார் என்பது இவர்களுடைய எண்ணம். ஆனால், இந்த எண்ணம் மெய்யறிவுக்கு (Truth) முற்றிலும் புறம்பானது.
இன்று நாம் வாழும் உலகம் அறிவியலால் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். நேற்று முடியாத பல காரியங்கள் இன்று சாதாரணமாக நடக்கிறது; அறிவியலால் சாத்தியப்பட்டிருக்கிறது. இந்த அசுர வளர்ச்சியைப் பார்க்கும்போது, ‘இப்படியே போனால், சீக்கிரமே கடவுள் தேவைப்படமாட்டார்; மதங்கள் எல்லாம் அவசியமில்லாமல் போய்விடும்’ என்று சிலர் சொல்வதைக் கேட்டிருப்போம். சில நேரங்களில் நமக்கே கூட அந்தக் கேள்வி வந்திருக்கலாம். இதை எப்படிப் புரிந்துகொள்வது?.
நான்கு முக்கிய கோணங்களில் இதற்கான பதிலைத் தரலாம்.
1. வகையறுத்தல் பிழை (Category Error)
இதை ஆங்கிலத்தில் Category Error என்று சொல்வார்கள். அதாவது – “எப்படி” என்பது வேறு, “ஏன்” என்பது வேறு!
அறிவியல் என்பது “எதுவும் எப்படி இயங்குகிறது?” (Mechanism) என்பதை விளக்குகிறது. ஆனால் வேதாகமம், “எதுவும் ஏன் இருக்கின்றது? அதை உண்டாக்கினவர் யார்?” (Purpose and Agency) என்பதை விளக்குகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.
இதற்கு இரண்டு ஒப்புவமைகளை (Analogies) நாம் பார்க்கலாம்:
அ. ஹென்றி ஃபோர்ட் (Henry Ford) உதாரணம்:
இந்த உதாரணத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கணிதப் பேராசிரியர் ஜான் லென்னாக்ஸ் (John Lennox) தன் பேட்டிகளில் அடிக்கடிக் குறிப்பிடுவதை நான் கேட்டிருக்கிறேன். ஒரு கார் எப்படி ஓடுகிறது என்று ஒரு மெக்கானிக்கால் முழுமையாக விளக்க முடியும். இன்ஜினுக்குள் எரிபொருள் எப்படி வெடிக்கிறது, சக்கரங்கள் எப்படி சுழல்கிறது என்று அவர் அணுவணுவாக விளக்கலாம். இப்போது ஒரு கேள்வியை கேட்போம்: “இன்ஜின் எப்படி வேலை செய்கிறது என்று நமக்குத் தெரிந்துவிட்டபடியினால், இந்த காரை வடிவமைத்த ஹென்றி ஃபோர்ட் என்று ஒருவர் இல்லை என்று ஆகிவிடுமா?”
நிச்சயமாக இல்லை! இன்ஜினின் செயல்முறை என்பது ஹென்றி ஃபோர்ட் என்கிற நபருக்கு மாற்றாகாது. சொல்லப்போனால், அந்த இன்ஜினின் நுட்பத்தை நாம் எவ்வளவுக்கு அதிகமாக அறிந்துகொள்கிறோமோ, அந்த அளவுக்கு அதை வடிவமைத்தவரின் ஞானத்தை வியப்போம். பிரபஞ்சமும் அப்படித்தான்; அறிவியல் அதன் இயக்கத்தை விளக்குகிறது, அது தேவனை ஒருக்காலும் இல்லாமல் ஆக்கப்போவதில்லை.
ஆ. தேநீர் பாத்திர உதாரணம்:
அடுப்பில் இருக்கும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஏன் கொதிக்கிறது என்று கேட்டால், அறிவியல் சொல்லும்: “வெப்பத்தினால் நீர் மூலக்கூறுகள் (Molecules) வேகமாக இயங்குவதால் தண்ணீர் கொதிக்கிறது”. இது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில், “நான் தேநீர் அருந்த விரும்புகிறேன், அதனால் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்கிறது” என்று சொல்வதும் உண்மை. அறிவியல் ரீதியான விளக்கம், அந்த செயலின் நோக்கத்தையோ (Purpose), காரணராகிய நபரையோ பொய்யாக்கிவிடாது.
2. இடைவெளிகளின் கடவுள் அல்ல (Not a God of the Gaps)
எங்கெல்லாம் கடவுளை நம்புகிறவர்களால் பதில் சொல்ல முடியவில்லையோ, அங்கெல்லாம் கடவுளைக் கொண்டு நிரப்பிவிடுகிறோம் என்கிற குற்றச்சாட்டு நாத்திகர்களால் வைக்கப்படுகிறது. இதைத்தான் ஆங்கிலத்தில் “God of the gaps” என்பார்கள்.
ஆனால் அவர்கள் நினைப்பது போல, நமக்கு புரியாத காரியங்களுக்கு மட்டுமானவர் அல்லர் நம் தேவன். “மின்னல் எப்படி வருகிறது என்று தெரியவில்லை, ஆகவே அது இறைவனுடைய வேலை” என்று நாம் சொல்வதில்லை. நாம் ஆராதிக்கும் தேவன் “இடைவெளிகளின் கடவுள்” அல்ல.
மாறாக, நாம் புரியாதவைகளை கண்டு மட்டுமல்ல, அறிவியல் விளக்குகிற காரியங்களின் ஒழுங்கையும், நேர்த்தியையும் கண்டும் தேவனை மகிமைப்படுத்துகிறோம். அவர் எல்லாவற்றையும் உண்டாக்கினவர் மட்டுமல்ல, வேதாகமம் கூறுகிறபடி, “தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே எல்லாவற்றையும் தாங்குகிறவருமாயிருக்கிறார்” (எபிரெயர் 1:3).
அறிவியல் விதிகளை (Laws of Nature) தேவனே வகுத்திருக்கிறார். நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தபோது, “இனி தேவன் தேவையில்லை” என்று சொல்லவில்லை; மாறாக அந்த ஈர்ப்பு விசையை இத்தனை துல்லியமாகப் படைத்த தேவனைத் துதிக்கவே செய்தார்.
3. சரித்திரம் சொல்லும் சாட்சி
அறிவியல் வளர்ந்தால் இறைநம்பிக்கை அழியும் என்பது உண்மையானால், நவீன அறிவியலின் உச்சத்தில் இருப்பவர்கள் நாத்திகர்களாக அல்லவா இருக்க வேண்டும்?
1901 முதல் 2000 வரையிலான காலகட்டத்தில் நோபல் பரிசு பெற்ற உலகளாவிய விஞ்ஞானிகளில் சுமார் 65 விழுக்காட்டினர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அடையாளப்படுத்தியிருக்கிறார்கள் (ஆதாரம்: Baruch Shalev எழுதிய ‘100 Years of Nobel Prizes’ புத்தகம்).
- வெர்னர் ஐசன்பெர்க் (Werner Heisenberg): குவாண்டம் எந்திரவியல் (Quantum Mechanics) துறையின் முன்னோடியும் நோபல் பரிசு பெற்றவருமான இவர் சொல்லுகிறார்: “இயற்கை அறிவியல் என்னும் கிண்ணத்தில் அருந்தும் முதல் மிடறு (first sip) உங்களை நாத்திகராக்கும்; ஆனால் அந்த கிண்ணத்தின் அடியில் தேவன் உங்களுக்காகக் காத்திருப்பார்.”
- வில்லியம் பிலிப்ஸ் (William Phillips): 1997-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர். அவர் சொல்லுகிறார்: “நான் ஒரு சாதாரண மனிதனாகவும், அதே வேளையில் ஒரு இயற்பியல் விஞ்ஞானியாகவும் இருப்பதினாலேயே தேவனை நம்புகிறேன். இந்த பிரபஞ்சம் எவ்வளவு துல்லியமாகப் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை என் அறிவியல் அறிவு எனக்குக் காட்டுகிறது.”
நவீன அறிவியலின் முன்னோடிகளான ஜோகன்னஸ் கெப்ளர் (கோள்களின் இயக்க விதிகள்), ராபர்ட் பாயில் (நவீன வேதியியலின் தந்தை), கெல்வின் பிரபு (Lord Kelvin – வெப்ப இயக்கவியல்) போன்றோர் ஆழமான தேவபக்தி உள்ளவர்களே. கெப்ளர் சொன்னது போல, “அறிவியல் என்பது தேவனுடைய சிந்தனைகளை அவருக்குப் பின் நாம் சிந்திப்பதே” (Thinking God’s thoughts after Him) ஆகும்.
இன்னும் பலரை உதாரணமாக வைத்துத் தனிக்கட்டுரையே எழுதலாம். தலைசிறந்த அறிஞர்கள் அறிவியலையும் ஆண்டவரையும் பிரித்துப் பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
அறிவியல் ஒரு நல்ல வேலைக்காரன்தான், ஆனால் நிச்சயமாக அது எஜமான் ஆகத் தகுதியற்றது.
4. அறிவியலின் வரம்புகள் (Limits of Science)
அறிவியல் ஒரு நல்ல வேலைக்காரன்தான், ஆனால் நிச்சயமாக அது எஜமான் ஆகத் தகுதியற்றது.
அறிவியலால் ஒரு அணுவை பிளக்க முடியும் என்று சொல்லித்தர முடியும்; ஆனால் அந்த சக்தியை வைத்து மின்சாரம் தயாரிப்பதா அல்லது அணுகுண்டாக வேறு ஒரு தேசத்தின் மீது வீசி மக்களை அழிப்பதா என்கிற “ஒழுக்கத்தை” (Morality) அதனால் போதிக்க முடியாது.
அதேபோல, மனித வாழ்வின் மேன்மையான கேள்விகளான—“நான் ஏன் இங்கு இருக்கிறேன்?”, “வாழ்வின் நோக்கம் என்ன?”, “நன்மை தீமை என்றால் என்ன?”—என்பவைகளுக்கு அறிவியல் பதில் அளிப்பதில்லை. அளிக்கவும் முடியாது. அவைகளுக்கு பதில் இன்றி மனித வாழ்வு இல்லை. எனவே, அறிவியல் மட்டுமே மனிதனை முழுமையாக்கிவிடாது. உண்மையில் மனிதர்களில் இருக்கும் வெற்றிடத்தை இறைவனால் மட்டுமே நிரப்ப முடியும்.
ஆக,
மெய்யான அறிவியல் ஒருபோதும் தேவனை மறுக்காது; மாறாக, சிருஷ்டிப்பின் விசித்திரங்களை விளக்க விளக்க, சிருஷ்டிகரின் மகிமை இன்னும் அதிகமாக பிரகாசிக்கும். சங்கீதக்காரனோடு இணைந்து, “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது” (சங்கீதம் 19:1) என்று அறிவியலும் சாட்சி கொடுக்கும்.
Benny Alexander. Dec 2025.