
உலக வரைபடத்தில் இஸ்ரவேல் ஒரு தேசமாக மட்டும் இல்லை; அது மீண்டும் உருப்பெற்ற காலத்தில் இருந்தே விவாதங்களின் மையப்புள்ளியாகவும் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொன்னால், பல ஆயிர ஆண்டு சர்ச்சை வரலாறு ஒரு நாட்டுக்கு இருக்குமென்றால் அது இஸ்ரேல் தேசம் அல்லது யூதர்களைக் குறித்ததாகத்தான் இருக்கும். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களைக் குறித்த ஒரு குழப்பம் உண்டு. ஒருபுறம், “அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவர்களுக்கு நாம் நிபந்தனையற்ற ஆதரவு தர வேண்டும்” என உணர்ச்சிவசப்படும் ஒரு கூட்டம்; மறுபுறம், “அவர்கள் கிறிஸ்துவை நிராகரித்தவர்கள், இன்றைய யூதர்கள் ஆபிரகாமின் உண்மையான சந்ததியினரே அல்ல” என அவர்களை முற்றிலுமாகத் தள்ளிவைக்கும் மற்றொரு தரப்பு. யுத்த மேகங்கள் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், ஒரு விசுவாசி எடுக்க வேண்டிய சமநிலையான வேதாகம நிலைப்பாடு என்னவாக இருக்கமுடியும்?
இன்றைய யூதர்கள் யார்?
இன்றைய இஸ்ரேல் தேசத்தைக் குறித்து எழும் மிக முக்கியமான கேள்வி: “1948-ல் உருவான இந்த நாடு உண்மையில் இறைத்திட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஒன்றுதானா?” என்பதுதான். பல கிறிஸ்தவர்கள் இதைத் தீர்க்கதரிசன நிறைவேற்றமாகப் பார்க்கிறார்கள். ஆனால், மறுபுறம் இது வெறும் அரசியல் நகர்வுகளால் உருவான ஒரு நாடு என்றும், இதற்கும் விவிலிய வாக்குத்தத்தங்களுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றும் வலுவான வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக, இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது இந்த மண்ணில்தான் தனது இறுதித் திட்டங்களை நிறைவேற்றப்போகிறாரா? எருசலேமில் மீண்டும் ஒரு ஆலயம் கட்டப்பட்டு அங்கிருந்துதான் ஆட்சி நடைபெறுமா? போன்ற கேள்விகள் இன்று விவாதப் பொருளாகியுள்ளன. வேதாகமத்தின்படி, தேவன் ஒரு நிலப்பரப்பை விட ஆவிக்குரிய தேசத்தையே முன்னிலைப்படுத்துகிறார்; அது திருச்சபையே என்கிற கருத்தை இறையியலாளர்கள் முன்வைக்கிறார்கள். அதாவது, பழைய ஏற்பாட்டு நிழலாட்டங்கள் கிறிஸ்துவுக்குள் நிஜமாகிவிட்டன என்று நம்புபவர்களுக்கு, இன்றைய புவியியல் ரீதியான இஸ்ரேல் என்பது ஒரு தேசமே தவிர, அதுவே இரட்சணியத்தின் மையப்புள்ளி அல்ல. மேலும் இப்போதிருப்பவர்கள் ஒரிஜினல் யூதர்களே அல்ல என்றுகூட வாதிடுபவர்கள் உண்டு.
மனிதர்களின் வரலாற்று ஆராய்ச்சிகளைக் காட்டிலும், தேவனுடைய இறையாண்மை மிக்கத் திட்டம் பெரியது.
ஆனால், ஒரு கிறிஸ்தவராக இதை நாம் வேதத்தின் நிழலில் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் நின்று அணுகுவது அவசியம். தேவன் ஒரு குறிப்பிட்ட ‘மரபணுவை’ (DNA) மட்டும் நேசிக்கவில்லை; அவர் ஒரு ‘உடன்படிக்கையின்’ அடிப்படையில் கிரியை செய்கிறார். யூதர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட காலங்களில் பல்வேறு இனத்தவர்களுடன் கலந்திருக்க வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குவது போல: “புறம்பாக யூதனானவன் யூதனல்ல… உள்ளத்திலே யூதனானவனே யூதன்” (ரோமர் 2:28-29). இன்றைய யூதர்கள் இரத்த ரீதியாக யாராக இருந்தாலும், அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்காதவரை ஆவிக்குரிய இஸ்ரவேலராக முடியாது. அதே சமயம், அவர்கள் தங்களை “யூதர்கள்” என்று அடையாளப்படுத்திக் கொள்வதாலேயே, அவர்களுக்குச் சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டிய ஒரு விசேஷித்த பொறுப்பு சபைக்குத்தான் இருக்கிறது. மனிதர்களின் வரலாற்று ஆராய்ச்சிகளைக் காட்டிலும், தேவனுடைய இறையாண்மை மிக்கத் திட்டம் பெரியது.
வேரும் கிளைகளும்
யூத மக்களின் நிலை குறித்து ஒரு சமநிலையான பார்வையை வேதாகமம் முன்வைக்கிறது. இதை நாம் அறிந்திருப்பது அவசியம்.
- மாறாத அழைப்பு: ரோமர் 11-ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல், புறஜாதி விசுவாசிகள் யூதர்களுக்கு எதிராகப் பெருமை பாராட்டக்கூடாது என்று எச்சரிக்கிறார். “தேவனுடைய கிருபைவரங்களும் அழைப்புகளும் மாறாதவைகளே” (ரோமர் 11:29) என்று அவர் சொல்வது, யூத இனத்தின் மீது தேவன் இன்னும் ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அது 2000 ஆண்டுகளில் மாறிவிடவில்லை!
- ஒரே இரட்சிப்பு: அதே நேரத்தில், யூதர்களுக்கு என்று தனி இரட்சிப்பின் வழி கிடையாது. “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்ற கிறிஸ்துவின் வார்த்தை யூதர்களுக்கும் பொருந்தும். அவர்கள் கிறிஸ்துவைக் கொன்றார்கள் என்பது வரலாற்று உண்மை என்றாலும், அதற்காகத் தேவன் அவர்களை முழுமையாகத் தள்ளிவிடவில்லை. “தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ? தள்ளிவிடவில்லை” (ரோமர் 11:1) என்பதே வேதாகமப் பதில். சரியாகச் சொன்னால், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு உலகமெங்கும் அறிவிக்கச் சென்றவர்கள் அவர்கள்தான். இதைத்தான் “இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது” என்று ஆண்டவரும் சொன்னார் (யோவான் 4:22).
கிறிஸ்தவ வரலாற்றுப் பார்வை
வரலாற்றுச் சிறப்புமிக்க வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் 1689 லண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கைகள், யூதர்களின் எதிர்கால மனந்திரும்புதலைப் பற்றிப் பேசுகின்றன. இதைச் சுற்றியுள்ள இறையியல் பார்வைகளை மூன்றாகப் பிரிக்கலாம்:
- யுகப்பகுப்பு இறையியல் (Dispensationalism): இவர்கள் தேவன் இஸ்ரவேலையும் சபையையும் இரு வேறு திட்டங்களாக வைத்திருக்கிறார் என்றும், இன்றைய இஸ்ரவேல் அரசு தீர்க்கதரிசன நிறைவேற்றம் என்றும் நம்புகிறார்கள்.
- உடன்படிக்கை இறையியல் (Covenant Theology): சபை என்பது ‘புதிய இஸ்ரவேல்’ என்றும், பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்கள் அனைத்தும் கிறிஸ்துவுக்குள் விரிவடைந்து திருச்சபையில் நிறைவேறிவிட்டன என்றும் இவர்கள் கருதுகின்றனர். இவர்களைப் பொறுத்தவரை இன்றைய இஸ்ரவேல் ஒரு சாதாரண அரசியல் நாடு மட்டுமே.
- பதிலீட்டு இறையியல் (Replacement Theology): யூதர்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டனர் என்றும், சபை அவர்களை முழுமையாகப் பதிலீடு செய்துவிட்டது என்றும் இவர்கள் வாதிடுகின்றனர். இவர்களுக்கு யூத இனத்தின் மீது எந்த ஆவிக்குரிய எதிர்பார்ப்பும் இல்லை.
ஆனால், சீர்திருத்தவாத (Reformed) முன்னோடிகள் பலரின் புரிதல் என்னவென்றால், காலத்தின் முடிவில் யூத மக்கள் பெரும் திரளாக கிறிஸ்துவின் பக்கம் திரும்புவார்கள் என்பதாகும். இது ஒரு அரசியல் நிகழ்வாக அல்லாமல், ஒரு ஆவிக்குரிய எழுச்சியாகவே பார்க்கப்படுகிறது.
இன்றைய கிறிஸ்தவரின் நிலைப்பாடு
யுத்தங்கள் நடக்கும்போது ஒரு கிறிஸ்தவன் எங்கே நிற்க வேண்டும்? இங்கேதான் ஆவிக்குரிய முதிர்ச்சி தேவைப்படுகிறது.
- மக்களையும் அரசியலையும் பிரியுங்கள்: ரோமர் 11-ன் படி யூத மக்கள் மீது நாம் அன்பு காட்டலாம்; ஆனால், அதற்காக ஒரு அரசியல் அரசு எடுக்கும் எல்லா ராணுவ முடிவுகளையும் “தேவ சித்தம்” என்று நியாயப்படுத்த வேண்டியதில்லை.
- நீதி அனைவருக்கும் பொதுவானது: மீகா 6:8-ன் படி நீதி என்பது அனைவருக்கும் சமமானது. யூதர்களின் உயிர்வாழும் உரிமையை ஆதரிக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காகவும் நீதிக்காகக் குரல் கொடுப்பது நம் கடமை. அது ஈரானியருக்கும் பொருந்தும். அவர்களும் இறைச்சாயலில் படைக்கப்பட்ட மக்களே; அவர்களுக்கும் கிறிஸ்து அவசியம்.
- சுவிசேஷமே தீர்வு: அவர்கள் உண்மையான யூதர்களா இல்லையா என்ற விவாதத்தை விட, அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு தேவை என்பதே பிரதானமானது. சிலுவையில் இயேசு, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும்” என்றே வேண்டினார். அந்த மன்னிக்கிற சுபாவமே நம்மிடமும் இருக்க வேண்டும்.
கொஞ்சம் கடினம்தான், ஆனால் ஒரு சமநிலையான கிறிஸ்தவப் பார்வை என்பது, யூதர்களைத் தேவன் முழுமையாகத் தள்ளிவிடவில்லை என்பதை அங்கீகரிப்பதோடு, அவர்களும் மற்றவர்களைப் போலவே கிறிஸ்துவின் நற்செய்தியின் மூலமே இரட்சிக்கப்பட முடியும் என்பதை வலியுறுத்துவதாகும். நாம் அவர்களைத் தெய்வமாக உயர்த்திப் பிடிக்கவும் கூடாது, அதே சமயம் வெறுப்புக் கோட்பாடுகளைக் கொண்டு அவர்களைத் தூற்றுவதும் ஆகாது!.
பென்னி அலெக்ஸாண்டர், மார்ச் 2026