(நித்தியம் குறித்த ஒரு பார்வை)

‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) மூலம் கடந்த காலத்திற்கோ, அல்லது எதிர்காலத்திற்கோ பயணம் செய்வது என்பது பலரும் ஏங்கும் ஒரு விஷயம். திரைப்படங்களில் இத்தகைய பயணங்களைப் பார்ப்பதே நமக்கு ஆச்சரியம் ஊட்டும் விஷயம்தான்! (ஐய்யகோ… ஒரு கிறிஸ்தவன் சினிமா பார்ப்பதா? – என்று அதிராமல் தொடர்ந்து வாசியுங்கள் ப்ளீஸ்) எனக்கும் 80-களுக்குத் திரும்பிச் சென்று, நாங்கள் வசித்த அந்த ஹவுசிங் போர்டு காலனியில் என் நண்பர்களுடன் ‘மரக்குரங்கு’ விளையாட வேண்டும் என்கிற ஆசை உண்டு. மொபைல் இல்லாத அந்த 1987 வேர்ல்ட் கப் கிரிக்கெட்டை நண்பர்களுடன் கருப்பு வெள்ளை டிவியில் ஆர்ப்பரித்துப் பார்த்த அந்த நாட்களில், ஒரு மேட்சையாவது மீண்டும் பார்த்துவிட வேண்டும்!
ஆனால் நம்மால் ஒரு நேர்கோட்டுப் பாதையில் மட்டுமே வாழமுடியும். நேற்றைய தினத்தை ஒரு நினைவாகவும், இன்றைய தினத்தை ஒரு போராட்டமாகவும், பரலோகத்தை ஒரு தூரத்து நம்பிக்கையாகவுமே நாம் அனுபவிக்கிறோம். நாம் காலவரிசைக்கு உட்பட்ட சிருஷ்டிகள்; எப்போதும் எதிர்காலம் வருவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.
தேவனோ எதற்கும் காத்திருப்பதில்லை. காரணம், ‘காலம்’ என்கிற ஒரு சொல்லுக்கே அப்பாற்பட்டவர் அவர். நாட்களும் வருடங்களும் நகரும் அந்த நேர்கோட்டுப் பாதைக்கு அவர் கட்டுப்பட்டவர் அல்ல.
அவரைப் போன்று வரலாறுகள் அனைத்தையும் ஒரே கணத்தில், ஒரே பார்வையில் காணும் ஒரு உன்னத ஸ்தானத்தைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்! அந்த ஆதியிலே பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்ததை தேவன் காண்கிறார். அதே பார்வையில், ஏதேன் தோட்டத்தில் ஆதாம் அந்த விலக்கப்பட்ட கனியை நோக்கி கையை நீட்டுவதையும் காண்கிறார். ஜலப்பிரளயம் பெருகி பேழையைச் சூழ்ந்துகொள்வதையும், மோரியா மலையில் ஈசாக்கின் மேல் ஆபிரகாம் கத்தியை ஓங்குவதையும் அவர் பார்க்கிறார். கல்வாரிச் சிலுவையில் கிறிஸ்து தொங்குவதையும் காண்கிறார்.
இவைகள் ஒருபுறம் இருக்க, அதே வினாடியில், இப்போது மேஜையில் அமர்ந்து இதை லேப்டாப்பில் தப்பும் தவறுமாக டைப் செய்வதையும், அதைச் சரி செய்யும் போது இன்னொரு பக்கம் மொபைலைப் பார்க்கும் என்னையும், இன்னும் பிறக்காத என் பேரப்பிள்ளைகளையும் அவர் காண்கிறார். அதுமட்டுமா? நீங்களும் நானும் பரலோகத்தில் முற்பிதாக்களோடு இணைந்து அவரை ஆராதித்துக்கொண்டிருப்பதையும் காண்கிறார்! ஆம், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில், இப்போதே அவர் காண்கிறார்! அவரைப் பொறுத்தவரை காலம் என்பது கடந்தகாலம், எதிர்காலம் என்றில்லாமல், ஒரே ஒரு ‘இப்போது’ மட்டும்தான்!
‘எல்லாக் காலங்களையும், எல்லா நேரத்திலும் பார்த்துக் கொண்டே இருக்கும் ஒரு நிகழ்வு’ என்பது மனித அறிவுக்கு எட்டாத ஒன்று. ஆனால், காலத்தைக் கடந்த தேவன் இப்படித்தான் பார்க்கிறார். “உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது” (அப் 15:18) என்று வேதம் சொல்கிறது. அவருடைய செயல்கள் அவருக்கு ஆச்சரியமானவை அல்ல; அவை நித்தியமாகவே அவருடைய பார்வையில் இருக்கின்றன.
இதை ஓரளவு உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால், அது நம்முடைய அன்றாடப் போராட்டங்களை நாம் பார்க்கும் விதத்தையே மாற்றிவிடும். “என் ஜெபத்திற்குப் பதிலளிக்க தேவன் ஏன் தாமதிக்கிறார்?” என்ற கேள்வியுடன் நாம் அடிக்கடி போராடுகிறோம். ஆனால், அவர் காலத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதை நாம் புரிந்துகொண்டால், “தாமதம்” என்ற வார்த்தையே அவருடைய அகராதியில் இல்லை என்பதை உணர்வோம். அவருக்கு “சரியான நேரம்” என்கிற ஒன்று மட்டுமே தெரியும். அவர் செயல்படும்போது, அவருடைய நித்திய நோக்கம் நம்முடைய காலவரிசையுடன் இணைந்து, நமக்கு உண்மை நிலையாக மாறுகிறது. நமக்குக் காத்திருக்கும் காலமாகத் தோன்றுவது, அவருடைய பார்வையில் ஏற்கனவே முடிந்துவிட்ட ஒரு திட்டத்தின் வெளிப்பாடுதான் என்று புரிந்து கொள்ளுங்களேன்!
இதே சத்தியம்தான் நம்முடைய இரட்சிப்பின் நிச்சயத்திற்கும் அஸ்திவாரமாக அமைகிறது. ஒரு விசுவாசி பரலோகத்தை எதிர்நோக்கும்போது, அவர் ஒரு வாக்குத்தத்தத்தை நோக்குகிறார். ஆனால், தேவன் அதே விசுவாசியைப் பார்க்கும்போது, அவர் ஒரு முடிந்த நிகழ்வு ஒன்றைப் பார்க்கிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல், ரோமர் 8:30-ல் இந்த “நித்தியத்தின் இலக்கணத்தைப்” பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறார்: “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.”
இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள காலத்தைக் கவனியுங்கள். நாம் மகிமைப்படுத்தப்படுவோம் என்று பவுல் எதிர்காலத்தில் நடக்கப்போகும் செயலாகச் சொல்லவில்லை. “மகிமைப்படுத்தியுமிருக்கிறார்” என்று இறந்தகாலத்தைப் பயன்படுத்துகிறார். நமது காலவரிசையில், நமது மகிமைப்படுதல் என்பது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் ஒரு எதிர்கால நிகழ்வு. ஆனால், தேவனுடைய உன்னதப் பார்வையிலோ, அது நடந்து முடிந்ததைப் போன்றதுதான்!
போராடிக்கொண்டும், குறைகளோடும், காலத்திற்குட்பட்டும் இருக்கும் நம்முடைய தற்போதைய நிலையை மட்டுமல்ல; முழுமையானவர்களாகவும், புதுப்பிக்கப்பட்டவர்களாகவும், அவர் சமூகத்தில் நிற்கப்போகிறவர்களாகவும் நாம் எப்படி இருப்போமோ அதையும் அவர் காண்கிறார். இதுதான் நமது நம்பிக்கையின் அடிப்படை. நாம் இறுதிவரை ஓடி முடிப்போம் என்று நம்மை நாமே தேற்றிக்கொள்வதற்காக சும்மா நம்பிக்கொண்டிருக்கவில்லை. நித்தியமானவரின் பார்வையில், நாம் ஏற்கனவே அங்கே போய்ச் சேர்ந்துவிட்டோம் – அவரோடு கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்கிற அந்த சத்தியத்தில்தான் நாம் இளைப்பாறுகிறோம்.