
பாதியில் கட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டுக்கிடக்கும் வீடுகளைப் பார்த்திருக்கிறீர்களா? செங்கல்கள் சிதிலமடைந்து, செடிகொடி முளைத்து, துருப்பிடித்த கம்பிகள் நீட்டிக்கொண்டு- பார்ப்பவருக்கெல்லாம் ஒருவித அவஸ்ததை உண்டாக்கும். நான் தினமும் போகும் வழியில் அப்படிப் பாதியில் நிற்கும் பெரிய கட்டிடம் ஒன்று உண்டு. இன்று பேங்க் லோன் வாங்கிக்கட்டுவதால் இவற்றை அதிகம் பார்க்கமுடியவில்லை என்றாலும், இன்னும் பல மிச்சங்கள் ஆங்காங்கே உண்டு. அப்படி நிற்பவையெல்லாம் எவ்வளவு ஆசைகளுடன் அவை துவக்கப்பட்டிருக்கும்?
பெரும்பாலும் அங்கே சிலரது கனவுகள் பாதியில் விழித்தவுடன் கொஞ்சமே நினைவில் நிற்பதுபோல நின்றுகொண்டிருக்கும். கனவுகள் மறந்துபோய்விடும். ஆனால், இக்கட்டுமானங்கள் வருத்தங்களின் சின்னங்களாக மாறி நிற்கும்.
பலகாரணங்களுக்காக இவை பாதியில் நின்றுபோயிருக்கலாம். ஆனால் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் இருப்பது பணப்பிரச்சனையாகவே இருக்கும். குறிப்பாக அவைகள் வீடுகள் என்றால். சாரங்கள்கூடப் பிரிக்கப்படாமல், இன்னமும் அந்தப் பழைய சவுக்குக் கட்டைகளுடன் உதிர்ந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள் இன்னும் அவ்வப்போது கண்களில் படும்.
கிறிஸ்தவ வாழ்வை வேதம் ஒரு கட்டிடத்திற்கு- அதுவும் மாளிகைக்கு ஒப்பிடுகிறது. அப்போஸ்தர்கள் பவுல், பேதுரு இருவருமே இப்படி உவமானப்படுத்துகிறார்கள். (1 கொரிந்தியர் 3:9, 1 பேதுரு 2:5). இருவருடைய வார்த்தைகளையும் இணைத்துச் சொன்னால் ‘தேவனுடைய ஆவிக்குரிய மாளிகை’ இது. கட்டுபவர் கிறிஸ்து. அவர் செல்லும் செலவைக் கணக்குப் பார்க்காமல் துவக்குவதில்லை(லூக்கா 14:30 ). நாம் இப்படிப் பாதியில் நிற்பதற்காகக் கட்டப்படவில்லை. அது பரிதாபம். அவரே கட்டுபவர் என்பதால், அவரால் முழுமை அடைந்த உங்களைப் பார்க்கமுடியும் என்பதை முதலில் அறிந்தாகவேண்டும். அவ்வளவு சிலுவைப்பாடுகள் எல்லாம் அதற்காகத்தான்.
ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால், மாளிகை பாதியில் நிற்பதுபோலத் தோன்றினால் நாம் செய்யவேண்டியது சுயபரிசோதனை. பெரும்பாலானவர்கள் இதை உணர்வதில்லை என்பதால், கட்டப்படும் மகிழ்ச்சி அவர்களுல் இருப்பதில்லை. இதைக் கொஞ்சம் நின்று நிதானித்து தியானியுங்கள். பாதிக்கட்டிடம் ஆனாலும் கட்டுமானத்தில் இருக்கும் வீட்டுக்கும், கைவிடப்பட்ட ஒன்றுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா? வேதத்தைத் திறவுங்கள். ஜெப நேரத்தை உங்களுள் தீர்மானியுங்கள். திரும்பத் துவங்குவது சிரமமானத் தான் இருக்கும். கட்டிடவேலை அது. முடிக்கப்படவேண்டியது. அழகாக நிறையவடைய வேண்டியது. நம்மில் நற்கிரியைகளைத் துவங்கியவர் அவர். அவருடைய நாள்மட்டும் கட்டி வருகிறார்.
தங்களைக் கிறிஸ்தவராக உணரும் ஒவ்வொருவரும் – பாதியில் நிற்கும் அவலமான கட்டிடமாகக் காணப்படக் கூடாது என்று ஆசைப்படவேண்டும். இரட்சிப்பில் இயல்பாக வரவேண்டிய மிகச்சரியான ஆசை அது.