
பழைய ஏற்பாட்டில் வாசிக்க சவாலானவை என்றால் அது தீர்க்கதரிசன புத்தகங்கள் தான். கிறிஸ்தவர்களுக்குத் தீர்க்கதரிசனம் பிடிக்கிற அளவுக்கு, தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் பிடிக்காததற்குக் காரணம் அவற்றின் கடின நடைதான். ஆனால் அவர்கள்தான் தேவனது பிரதிநிதிகளாகப் பூமியில் இருந்தவர்கள். இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த அவர்கள் வழியாகத்தான் தேவன் பேசினார். அவர் தெரிந்துகொண்ட அந்தப் பாத்திரங்களின் வேலை அவ்வளவு இலகுவாக இல்லை. காரணம் அவர்கள் வழியாக தேவன் பேசியவை கடினமானவை என்பதல்ல, அதைக் கேட்டு இணங்காத வணங்காக் கழுத்துள்ள கடின இருதய மக்கள்தான். அதனால் அந்தப் புத்தகங்களும் வாசிக்கக் கடினமாக இருக்கின்றன.
இந்தத் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் குறிசொல்லுகிறவர்கள் அல்ல; அவர்கள் தேவனுடைய இதயத்துடிப்பை வெளிப்படுத்தியவர்கள்! அவர்கள் வாழ்வும் இன்றைய தீர்க்கதரிசிகள் என்று தங்களையே சொல்லிக்கொள்கிற கனவான்களின் வாழ்வு போல இல்லை. எலியா மரணபீதியில் ஓடி அலைந்தார். ஏசாயா ரம்பத்தால் அறுபட்டார்; எரேமியா கல்லெறியப்பட்டார். சகரியாவும் அதேபோலத்தான். அவர்கள் வாழ்ந்த காலத்தில் உலகம் அவர்களை வெறுத்தது. ஆனால் அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வரலாற்றில் நிறைவேறியது; இன்றும் நிறைவேறுகிறது.
“மெய்யான தீர்க்கதரிசனம் எப்போதும் சிலுவையின் வழியே தான் கடந்து வரும்!”
‘பெரிய’ (Major) மற்றும் ‘சிறிய’ (Minor) தீர்க்கதரிசிகள் என்பது அவர்கள் செய்த ஊழியத்தின் அளவை வைத்து அல்ல; அவர்கள் எழுதிய புத்தகங்களின் அளவை வைத்தே பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
சில தமிழ் வேதாகமங்களில் மட்டும் இப்புத்தகங்களைப் பற்றி கொஞ்சம் விளக்கமான அறிமுகங்கள் உண்டு. ஆங்கிலத்தில் வாசிக்க முடிந்தால், இங்கிலாந்து தேசப் போதகர் ஐயா டேவிட் பாஸனது புத்தகமான Unlocking the Bible ஐ ஒரு காப்பி வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். எளிய ஆங்கிலத்தில் அமேசானில் கிடைக்கிறது.
நிறைய முறை வாசிக்க விரும்பி, வாசிக்காமல் விடுபவர்களுக்காக, அல்லது கஷ்டப்பட்டு வாசித்துக் கடப்பவர்களுக்காக அந்தப் புத்தகங்கள் பற்றி சிறு குறிப்புகள் கீழே – என்னுடைய சுருக்கம். அதில், இவர்கள் எப்போது வாழ்ந்தார்கள்? யாரை எதிர்த்து நின்றார்கள்? இவர்களுடைய முடிவு என்ன? என்பதையும் குறித்துக்கொள்ளுங்கள். பல சிறு தீர்க்கர்களின் முடிவு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இக்குறிப்புகள் வாசிக்கும்போது பயனுள்ளதாக இருக்கும்.
I. பெரிய தீர்க்கதரிசிகள் (The Major Prophets)
(புத்தகங்கள் அளவில் பெரியவை)
- ஏசாயா (Isaiah):
- காலம்/ராஜாக்கள்: உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா (யூதா ராஜாக்கள்).
- சிறப்பு: “வேதாகமத்தின் மினியேச்சர்” என்று அழைக்கப்படுபவர். வரப்போகும் மேசியாவைக் குறித்து இஸ்ரவேலருக்கு அதிகமாய் முன்னுரைத்தவர். மற்ற புத்தகங்களை விட வாசிப்பது எளிதுதான்!
- முடிவு: மனாசே ராஜாவின் காலத்தில், ஒரு மரக்கட்டைக்குள் வைத்து ரம்பத்தால் அறுத்துக் கொல்லப்பட்டார் என்று யூத பாரம்பரியம் கூறுகிறது (எபிரேயர் 11:37).
- எரேமியா (Jeremiah):
- காலம்/ராஜாக்கள்: யோசியா, யோயாக்கீம், சிதேக்கியா.
- சிறப்பு: “அழுகையின் தீர்க்கதரிசி”. தன் ஜனத்தின் அழிவைக் கண்டு கதறி அழுதவர். புதிய உடன்படிக்கையைப் (New Covenant) பற்றித் தீர்க்கதரிசனம் உரைத்தவர். ஏசாயாவை விடச் சற்றுக் கடினமானது, ஆனால் தவிர்க்கக்கூடாத புத்தகம்.
- முடிவு: சிறைபிடிக்கப்பட்ட ஜனங்களால் கட்டாயப்படுத்தி எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கே தன் சொந்த ஜனங்களாலேயே கல்லெறிந்து கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.
- எசேக்கியேல் (Ezekiel):
- சூழல்: பாபிலோன் சிறையிருப்பு காலம்.
- சிறப்பு: ஆசாரியனாய் இருந்து தீர்க்கதரிசியானவர். விசித்திரமான தரிசனங்களையும் (உலர்ந்த எலும்புகள்), செயல்பாடுகளையும் செய்தவர். பல வினோதமான விஷயங்கள் இவர் வாழ்வில் நிகழ்ந்தன. தேவனுக்குச் சிரத்தையாய் கீழ்ப்படிந்தவர்.
- முடிவு: பாபிலோனிலேயே மரித்தார்.
- தானியேல் (Daniel):
- சூழல்: நேபுகாத்நேச்சார், தரியு, கோரேஸ் (பாபிலோன் மற்றும் பெர்சிய அரசர்கள்).
- சிறப்பு: ராஜ்யங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைத் துல்லியமாக உரைத்தவர். தேவதூதர்களால் “பிரியமானவன்” என்று அழைக்கப்பட்டவர். வெளிப்படுத்தின விசேஷம் திறந்த வெளிப்பாடு என்றால், தானியேலின் புத்தகம் ஆராயப்பட வேண்டிய ஒன்று.
- முடிவு: சிங்கக் கெபியிலிருந்து தப்பினார். முதிர்வயதில் பாபிலோனிலோ அல்லது சூசாவிலோ மரித்திருக்கலாம்.
II. சிறிய தீர்க்கதரிசிகள் (The Minor Prophets)
(புத்தகங்கள் அளவில் சிறியவை)
- ஓசியா (Hosea): தேவனுடைய கட்டளையின்படி, சோரம் போன கோமேரைத் திருமணம் செய்தார். இஸ்ரவேலின் விபச்சார மார்க்கத்திற்கு இது ஒரு அடையாளம். கீழ்ப்படிதலுக்கு மற்றொரு உதாரணம்!
- யோவேல் (Joel): வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை வைத்து, கர்த்தருடைய நாள் வருவதை எச்சரித்தார். பெந்தெகோஸ்தே நாளில் ஆவியானவர் ஊற்றப்படுவதை முன்னுரைத்தவர் இவரே.
- ஆமோஸ் (Amos): இவர் ஒரு மேய்ப்பன்; அத்திப்பழம் பொறுக்குகிறவர். ஏழை எளியவர்களை ஒடுக்கிய பணக்காரத் திமிரை எதிர்த்துக் கர்ஜித்தவர். “நியாயம் தண்ணீரைப் போலப் புரண்டு வரக்கடவது” என்றவர்.
- ஒபதியா (Obadiah): ஒரே ஒரு அதிகாரம். சகோதரனாகிய யாக்கோபுக்கு (இஸ்ரவேலுக்கு) விரோதமாய் எழும்பின ஏசாவின் வம்சமாகிய ‘ஏதோமியருக்கு’ விரோதமான தீர்ப்பு.
- யோனா (Jonah): நினிவே பட்டணத்தார் மனந்திரும்ப வேண்டும் என்று ஊழியம் செய்தவர். மீன் வயிற்றுக்குள் மூன்று நாள் இருந்து உயிர்த்தெழுதலுக்கு அடையாளமானவர். நமக்கெல்லாம் வியப்பளிக்கும் ஒருவர். முடிவு தெரியவில்லை!
- மீகா (Micah): சமாரியா மற்றும் எருசலேமின் அழிவை முன்னுரைத்தார். கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பார் என்று துல்லியமாகச் சொன்னவர் (மீகா 5:2).
- நாகூம் (Nahum): யோனாவுக்குப் பின் சுமார் 100 வருடம் கழித்து, மீண்டும் பாவம் செய்த நினிவே பட்டணத்தின் (அசீரியா) இறுதி அழிவை அறிவித்தார்.
- ஆபகூக் (Habakkuk): “துன்மார்க்கன் ஏன் செழிக்கிறான்?” என்று தேவனோடு வாதாடினார். இறுதியில், “விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்” என்ற சத்தியத்தைக் கண்டடைந்தார்.
- செப்பனியா (Zephaniah): ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். கர்த்தருடைய நாளைக் குறித்த பயங்கரமான எச்சரிப்பு. ஆனால் மீந்திருக்கிறவர்கள் பாடுவார்கள் என்று முடித்தார்.
- ஆகாய் (Haggai): “உங்கள் வீடுகளைக் கட்டுகிறீர்களே, கர்த்தருடைய ஆலயத்தைப் பாழாகக் கிடக்கவிடலாமா?” என்று ஜனத்தைத் தட்டி எழுப்பி ஆலயத்தைக் கட்டவைத்தவர்.
- சகரியா (Zechariah): அதிகமாக மேசியாவைக் குறித்த தரிசனங்களைக் கண்டவர். (கழுதைக்குட்டியின் மேல் வருவார், 30 வெள்ளிக்காசுக்கு விற்கப்படுவார்).
- முடிவு: தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்டார் என்று நம்பப்படுகிறது (மத்தேயு 23:35).
- மல்கியா (Malachi): பழைய ஏற்பாட்டின் கடைசித் தீர்க்கதரிசி. “தேவனை வஞ்சிக்கிறீர்களே” என்று ஆசாரியர்களையும் ஜனங்களையும் கடிந்து கொண்டார். எலியா வருவார் (யோவான் ஸ்நானகன்) என்று முடித்தார்.
Benny Alexander, March 2026